சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி… மரக்கூட்டங்களுக்குள்ளே பழமையான கட்டிடங்கள்… ஆள் அரவம் குறைந்த சனிக்கிழமை மாலையில் இராணி மேரிக் கல்லூரியின் நிலை இவ்வாறிருக்க என்னடா இங்குதானே ‘ஆவண நாடகம்’ நடைபெறுவதாகக் கூறினார்கள் என்று நம் கை தன்னிச்சையாக அழைப்பிதழை மறுபரிசீலனை செய்கிறது. பின்பு அங்கிருந்த ஒருவரின் வழிகாட்டுதலில் கலை அரங்கத்திற்குள் சென்றால் ஏதோ மகளிர் திருவிழாவிற்கு வந்து விட்டோமோ என்ற பிரமையே நமக்கு ஏற்பட்டது. கனிமொழி, தமிழச்சி, சரஸ்வதி, அருண்மொழி, கலாராணி, மங்கை, கீதா உள்ளிட்ட பலரும் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தனர். உள்ளே நுழையவே வழியில்லை. எல்லா வழிகளிலும் ஆர்வத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்… எல்லாவற்றையும் கடந்து உள்ளே நுழைந்து பார்த்தபின்பே அவர்களின் ஆர்வத்திற்கான காரணம் என்னவென்று புரிந்தது.
மேடை, அலங்காரங்கள் இல்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முடியுமா?… முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் ‘காலக்கனவு’ ஆவண நாடகத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அ.மங்கை, கூத்துப்பட்டறை கலாராணி, சரஸ்வதி மற்றும் வ.கீதா குழுவினர்.
நவீன நாடகத்தில் இதுவும் ஒரு வகை என்றாலும் பார்வையாளர்களையும் நாடக மாந்தர்களாக உள்நுழைத்திருப்பது புதுமையான உத்தியாக்கப் பட்டிருக்கிறது.
அக்டோபர் 13-ம் தேதி நடத்தப்பட்ட இந்த ஆவண நாடகத்தைப் பற்றி மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வந்தவர்கள், வராதவர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் சரியாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்தது தான் அது.
பெண்களின் அடக்குமுறைக் காலத்தில் ஆரம்பித்து படிப்படியான பெண்ணிய விடுதலைக்கான போராட்டத்தையும், அதற்கான ஆதரவினையும் ஆவணங்களின் துணைக் கொண்டு விளக்க முற்பட்டுள்ளது இந்த நாடகம்.
ஆரம்ப கால மதமாறுதலுக்கான விஷயங்களில் முக்கியமானதாக இருந்தது பெண்களுக்கான அடக்குமுறைகளே. இந்த அடக்குமுறைகளே, பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பாக பெண்களை கிறித்துவ மதத்திற்கு மதம் மாற வைத்தது என்பன போன்ற கருத்துக்களை இந்த நாடகம் எடுத்துக் காட்டியது.
உண்மையான பெண் விடுதலைக்குப் பிள்ளைப் பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துப் போக வேண்டும். அது ஒழியாமல், சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாக இருந்தாலும் பெண்கள் பொதுவாக விடுதலை அடைந்து விடமுடியாது. 12.08.1928-ஆம் தேதியிட்ட குடியரசு இதழில் வெளிவந்த பெரியாரின் இந்த கருத்தைக் கூறிய நாடக்குழுவினர், அது என்ன சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வது என்பனப் போன்ற ஏளனக் கேள்விகளையும் கேட்கத் தவறவில்லை.
இந்த அளவுக்கு யோசிக்க வைத்த பெரியாருக்குக்கூட உந்துதலாக டாக்டர் முத்துலட்சுமி, மூவாலூர் இராமிர்தம் அம்மையார் போன்ற பெண்களே இருந்துள்ளார்கள் என்ற வரலாற்று உண்மைகளை இந்த ஆவண நாடகம் எடுத்துக் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
தேவதாசி இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி, இராமாமிர்தம் போன்றவர்கள், ‘பொட்டுக் கட்டுதல்’ என்ற மரபில் வந்திருந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்து அத்தகைய பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடியதை குறிப்பிட்டது இளையத் தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் இருந்தது.
தேசாபிமானத்திற்கு சமமாக கற்பாபிமானத்தைக் (கற்பின் மேல் இருக்கவேண்டிய பற்று) கூறி வந்த அந்தக் கால சமூகத்தைச் சாடிய நாடகக் குழுவினர், பலவிதக் கலைகளில் சிறந்து விளங்கிய கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களும் தன் கணவனுக்கு அடங்கி வாழ்ந்த வாழ்க்கை வரலாறுகளையும் படம் பிடிக்கத் தவறவில்லை.
ஒன்றும் தெரியாது என்று சமமான போட்டிக்கு அழைப்பு விடுத்த கணவர் கிட்டப்பாவுக்கு எதிராக தன் திறமையை நிரூபித்த கே.பி.சுந்தராம்பாளை, ‘நாய், தெரியாதென்று ஏமாற்றினாயோ…’ என்று கிட்டப்பா கேட்டது வரையிலான பதிவுகளும் இதில் இடம் பெற்றது சிறப்பு.
பெண்கள் விடுதலைப் போரில் ஊக்கத்துடனும், அதே சமயம் தன் குடும்பத்திற்கு தெரியாமல் மறைமுகமாகவும் கலந்து கொண்டதை ஒரு பாடலுடன் காட்சிப்படுத்தி பார்வையாளர்களையும் ஊக்கப்படுத்தியதையும் பாராட்டியே தீர வேண்டும்.
வேட்டி, அரைக்கை சட்டை மற்றும் சிவப்புத் துண்டுடன் வலம் வந்து போராட்டங்களில் கலந்து கொண்ட மணியம்மா என்பவர், மான் முட்டி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை ஏற்ற இறக்கத்துடன் பறை இசையுடன் கூடிய பாடல் மூலம் புரிய வைத்துள்ளனர்.
“ஆடு முட்டி கேட்டதுண்டுஆமை முட்டி கேட்டதுண்டோமாடு முட்டி கேட்டதுண்டுமான் முட்டிக் கேட்டதுண்டோ”
இந்தப் பாடல் மூலம் அவரின் உயிரிழப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளனர் இந்தக் குழுவினர்.
இத்தகைய பெண்களின் வேள்விகளாலும், இவர்களுக்கு ஆதரவுத்தீயாக குரல் கொடுத்த சுயமரியாதைக் கோட்பாடுகளிலும் கவரப்பட்டு 70 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமைப்படுத்தியது காலக்கனவு எனும் இந்த ஆவண நாடகம்.
இதில் முக்கியமாய் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரும், இந்த ஆவண நாடகத்தில் முழங்கியவர்களில் ஒருவருமான கவின்மலரின் பெற்றோர், இவர்களது திருமணம் பெரியாரால் நடத்தப்பட்ட முதல் இந்து-முஸ்லிம் திருமணம் என்ற செய்தி அரங்கில் வெளிப்படுத்தப்பட்டதும் கூடியிருந்தோரிடையே இனிமையைக் கூட்டியது.
இந்த நாடகத்தில், முழக்கமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் பொன்னி, சட்டக்கல்லூரி மாணவியாக அறிமுகப் படுத்தப்பட்ட இவரின் முழக்கத்திற்கு பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் கைத்தட்டலில் அரங்கை அதிர வைத்தனர். கல்பனா, ரேவதி போன்றவர்களின் நடிப்பும் பெண்ணியவாதிகளை யோசிக்க வைத்தது. இவர்களைத் தவிர அருண்மொழி, தமிழச்சி, அமுதா, யாழினி, அனிதா, நங்கை, ஓவியா, ஜெய்கணேஷ் போன்றவர்களும் கூட்டத்தினரிடையே முழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“விவாத மேடைகளில் அனைத்து விஷயங்களையும் பேசிவிட்டு இறுதியாக 10 நிமிட அவகாசம் இருந்தால் பேசப்படும் விஷயமாக பெண் சுதந்திரம் உள்ளது” என்று சமூகத்தைப் பார்த்துக் குரல் எழுப்பும் அளவிற்கு உரிமையும், எழுச்சியும் கொண்டு தங்களது விடுதலைக்காக தாங்களே போராடிய பெண் போராளிகளின் போராட்டங்கள், பாரதியுகம் தொடங்கி சுயமரியாதைக் காலம் வரை செழித்திருந்தது. ஆனால் கால வெள்ளோட்டத்தில் அதைத் தலைமையேற்றுத் தொடர்வார் யாருமின்றிச் சுயநலச் சமூகத்தால் வழக்கம்போல நசுக்கப்பட்டதைக் கூறி ஒரு பாடலுடன் காலக்கனவு முடிக்கப்பட்டது.
ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் காட்சிக்குட்படுத்தப் பட்ட ஆவணங்களை நாடகம் முடிந்த பின்பும் பார்வைக்காக வைத்திருந்தது நல்ல அணுகுமுறை.
பெண் சுதந்திரம் என்பது எத்தனை பெண்களின் தியாகங்களுக்கு நடுவே செழித்து வளர்ந்தது என்பதைக் கூறிய இந்தக் காலக்கனவு, அந்தக்காலக் கனவுகளுடனேயே முற்றுப் பெற்றது. பாதியில் நிறுத்தப்பட்ட இத்தகைய போராட்டங்களின் தொடர்ச்சியான வழிமுறையைக் கூற முற்பட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்.
அருமையான இந்த முயற்சியை, அனைவரும் அறியும்வண்ணம் பெரிய அளவில் செய்திருந்தால் சமூகத்தில் சிறிய அளவிலான சலசலப்பையாவது இந்தக் காலக்கனவு செய்திருக்கும். மேலும் வந்த அனைவரையும் சமமாக பாவித்து நாடாளுமன்ற உறுப்பினர் முதல் சாமானியர் வரை அனைவரையும் கீழே அமர வைத்தது நலம். ஆயினும், உள்ளே அதிக இடமின்மையால் வெளியில் நின்றுக் கொண்டிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். அனைவரும் காணும் வண்ணம் பெரிய அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்தச் செயல்பாட்டின் மூலம் நல்லப் படைப்புகளுக்கான மக்களின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் வெளிப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment