இந்நாடகத்துக்கான ஒத்திகை 2007 ஜூலை மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையில் உள்ள இயல், இயல், நாடக மன்றத்தின் ஒரு சிறு அரங்கில் ஒத்திகை தொடங்கியது. சனி-ஞாயிறுகளில் நடந்த இவ்வொத்திகை, நடிக்க இருந்த நால்வரும் நாடகப் பனுவல் செய்த வ.கீதாவும் நெறியாள்கை செய்த மங்கையும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வாய் மாறியது.
நாடகத்தின் சிறு குறிப்பு இதுவே: 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 1950கள் வரை வந்த பெண்களின் குரலை இந்நாடகம் எடுத்துரைக்கின்றது. இதில் முதலில் கவனிக்க வேண்டியது, அ. மங்கையும் வ. கீதாவும் சேர்ந்து பணி புரிவதின் முக்கியத்துவம். பெண்ணிய நாடகக்காரராக சுமார் 20 வருடங்களாகச் செயல்பட்டு வரும் மங்கை, இடதுசாரி அமைப்பு ஒன்றின் மாதர் சங்கத்தில் தொடங்கி இன்றுவரை நாடகமேடையில், பால்மைசார்ந்த விஷயங்களை வெளிக்கொண்டு வருவதில் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறார். சங்க கால, தற்காலக் கதைகள் அடிப்படையில் நாடகங்களை நிகழ்த்தியுள்ளார். இன்னொரு பக்கம் -சுயமரியாதை இயக்க வரலாற்றைத் திரட்டி நம்முன் வைத்த வ. கீதா, நாடகம் எழுதுதலில் முதல் படியைத் தாண்டியுள்ளார். எங்கு சென்றாலும் தம் பெண்ணியத்தை நெருங்க அணைத்துச் செயல்பட்ட இவர் சுயமரியாதை இயக்க வரலாற்றையும் பெண்ணியத்தையும் காலக்கனவில் ஒன்று சேர்த்துள்ளார்.
பால்மை சார்ந்த சர்ச்சைகள் இழையோடும் சங்க கால நாடகங்களை மேடையேற்றிய மங்கை, தம் பெண்ணியத்தைத் தெள்ளத் தெளிவாக காலக் கனவில் வெளிப்படுத்தியுள்ளார். இந்நாடகத்தில் நடித்த நால்வர், கல்பனா, கவின், ரேவதி மற்றும் நான். கல்பனா, அறிவியல் இயக்கத்தில் பல வருடங்களாகப் பணிபுரிந்து இப்பொழுது முனைவர்பட்ட ஆய்வை முடித்துள்ளார். கவின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உள்ளவர். ரேவதி இடதுசாரி இயக்கங்களில் பணிபுரிந்தவர். அவரது ‘சுனாமிக்குப்பிறகான’ வாழ்வில் நாகப்பட்டினத்தில் பூம்பூம்மாட்டுக்காரர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ‘வானவில்’ என்னும் பள்ளியை நடத்திவருகிறார். நான் பெண்ணிய ஆய்வுகளிலும் அதைச் சார்ந்த வேலைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.இவ்வனைத்து அறிமுகங்களுக்கும் ஒரு காரணம் உண்டு. காலக் கனவு தமிழகப் பெண்ணிய வரலாற்றை எழுதி நடிக்கும் முயற்சியாக மட்டுமில்லாமல், தமிழகப் பெண்ணிய முயற்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துவிட்டது. ஆறு பெண்ணியவாதிகள் ஓர் அறையில், ஒவ்வொரு சனி-ஞாயிறுகளில் சந்தித்தால் என்ன நடக்கும்?
காப்பியும் சாப்பாடும் செழித்தோடும். அடிக்கடி சர்சைகளில் தொடங்கிச் சண்டைகளில் முடியலாம். நாங்கள் அன்புச் சண்டைகள் தவிர வேறெதுவும் போட வில்லை. வ.கீதா எழுதத் தொடங்கிய பனுவல் வேறெங்கோ போய் முடிந்தது. எங்களுக்குள் எழுந்த சில சர்ச்சைகள் இதோ:
1. தேவதாசிகள் பற்றிய காட்சியில், இராமாமிருதத்தம்மாள், முத்துலட்சுமி மூலம் தேவதாசி வழக்கத்திற்கு எதிர்ப்பு, அதைச் சார்ந்த சட்டம் விளக்கப்படுகிறது. தேவதாசி குலத்தில் பிறந்த இவ்விருப்பெண்களும் வேறு வேறு வகைகளில் செய்த ஒரே வேலையை விவாதிக்கிறோம். எங்கள் நால்வருக்குள் ஒரு சர்ச்சை தொடங்கியது. அனைவரையும் போல நமது நாடகத்திலும் நாம் சோகக் கதைகளை மட்டும் சொல்வோமா? அல்லது வேறு மாதரியாகத் தேவதாசிகள் தம்வாழ்வை பற்றி யோசித்த, பேசிய அல்லது எழுதியவை இருக்கக்கூடுமா எனப் பேசினோம். ஆனால், இப்படியான வெளிப்பாடுகள் எழுத்து வடிவிலோ அல்லது ஏதாவது ஒரு வகையிலோ ஆவணப்படுத்தப்படவில்லை என அறிந்தோம். ஆதலால் வேறுவிதக் குரல்களை எங்களால் கேள்விகள் மூலம் மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. இந்நிலையில் பாலியல் தொழில்புரியும் பெண்கள் பற்றியும் பேசினோம். மும்பை, டெல்லி, கல்கத்தா, கேரளா ஆகிய அனைத்து இடங்களிலும் வன்முறை, இன்பம் ஆகியவை தொடர்பான சர்ச்சைகளை பாலியல் தொழிலாளிகள் பேசி வருகின்றனர். அவர்களது வாழ்க்கையின் சுதந்திரம், பாலியல் விழைவு பற்றியும் பேசி வருகின்றனர். இவ்வரலாற்றில் உருவான பெண்ணியவாதிகளான நாங்களும் இச்சையையும் இன்பத்தையும் ஒரு முக்கிய அரசியலாகக் கருதுகிறோம். எந்த அளவிற்கு கருதுகிறோம் என்பதில் எங்கள் ஆறு பேர் மத்தியில் வித்தியாசம் உண்டு. இச்சர்ச்சைக்குப்பின் அமைக்கப்பட்ட காட்சியில் இந்த வெவ்வேறு வகையான வெளிப்பாடுகள் சாத்தியமா எனக் கேள்வி கேட்கிறோம்.
2. சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றி நாங்கள் பேசும்போது பட்டியல் ஒன்று இடுகிறோம். அதில் ‘ஒரே சமயத்தில் இரு பெண்களை மணம் செய்து கொண்டதாக’ ஒரு வாக்கியம் வந்தது. உடனே நாங்கள் நால்வரும் கொதித்தெழுந்து இது என்ன சுயமரியாதை, எப்போதும் நடப்பது தானே என்றோம். பத்து வருடங்களுக்கு முன்பு பெண்ணியக்குழுக்களிலோ அல்லது இன்றும் பல குழுக்களிலோ இவ்வாக்கியத்தை மறு பேச்சின்றி அகற்றி இருப்பர். நாங்களோ பலத்த சர்ச்சையில் ஈடுபட்டோம். எம்மில் ஒருவர் இவ்விரு பெண்களின் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்திருக்கலாம் என்றோம். இன்னொரு பக்கம் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் ‘ஒப்புதலுக்கு’ உண்மையில் என்ன அர்த்தம் இருக்க முடியும் என வாதாடினோம். இவ்வாக்கியத்தை அகற்றுவதில் எங்களுக்கு இஷ்டமில்லை. இச்சர்ச்சையின் போது கீதா இல்லை. அவருக்கு இதைப் பற்றி அறிவித்தவுடன் இம்மணம் செய்து கொண்ட இரத்தினத்தாயம்மாள், நாகம்மாள் மற்றும் அரங்கசாமியின் கதையை அவர் தேடி எடுத்தார். நாடகத்தில் எங்களுக்கு எல்லாம் விருப்பமான ஒரு பகுதியாகவும் பலரைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகுதியாகவும் இது அமைந்தது. இப்பெண்கள் ஒருபால் இச்சை உள்ளவர்களாக இருந்திருக்கலாம் என்பதும் அந்த ஒரே அடிப்படையில் ஒரே ஆணை மணம் புரியும் அளவிற்கு ஆழ்ந்த உறவு கொண்டவர்களாக இருந்திருக்கலாம் என்பதும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.
பேசப்படாத பல பெண்ணியக் கூறுகளையும் நாம் இந்த ஆக்கத்தில் பார்க்க முடியும். இதில் பிரதானமானது, உடல்சார்ந்த சர்ச்சைகள். சர்வதேச அளவில் பெண்ணிய நோக்கிற்கு அத்தியாவசியமாக அமைந்துள்ளது உடல் சார்ந்த சர்ச்சை ஆகும். இதில் ஜூடித் பட்லர் (Judith Butler) விளக்கும் சொல்லாடல் மிக முக்கியமானது. அவர் பால் என்பதை நாம் அனைவரும் வெவ்வேறு வகைகளில் நிகழ்த்துகிறோம் (Perform) என்று வாதாடியுள்ளார். இந்தக் கோட்பாட்டை அவர் நாடக மேடை நிகழ்த்துதல் (Performance) மூலமாக விளக்கியுள்ளார். நாடகப் பயிற்சியின் முதல் பாடம் உடலின் ஒவ்வொரு பாகமும் எப்படி நடிக்கக்கூடும் என்பதாகும். பட்லரின் முறையியலைப் பயன்படுத்தி நாம் இந்நாடகத்தைக் காணமுடியும். உடல்சார்ந்த பெண்ணியச் சொல்லாடல்களைப் படித்து உணர்ந்தவர் மேடையேறினால் என்னவாகும் என்பதையும் காணலாம். நாடகப் பயிற்சி பெற்ற எனக்கு உடல்சார்ந்த சொல்லாடல் ஒரு புதுக்கோணத்தை அளித்தது. இந்நாடகத்தில் மேடையில் நின்று 18, 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களாக நடித்தபோது மேடையில் வெளிப்பட்ட என் ஆண்தன்மைப் (Masculinity) பற்றி என்னிடம் பலமுறை கூறப்பட்டது. என் உடன் நடித்தவர்களும் என் உடலில் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிந்தனர். இதன் காரணம் என்னவென்று யோசித்ததில், நாடகப்பயிற்சியும் பெண்ணியமும் ஒன்றுகூடிய மேடை ஒரு திறந்த, வசதியான உடலை எனக்கு உருவாக்கியுள்ளது. ஆனால், அது நாடகப் பயிற்சியால் மட்டும் வந்தது எனச் சுலபமாகக் கூறிவிடமுடியாது. 18, 19 ஆம் நூற்றாண்டின் பொது வெளியில் இயங்கிய பெண்களின் உடல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதே ஒரு முக்கிய சர்ச்சையாகக் கூடும். காலனிய ஆட்சியில், சென்னை மாகாண சட்டமன்றத்தின் ஒரே ஒரு பெண் உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமியின் குரல், ஆண்குரல்கள் மட்டுமே ஒலித்த 1920களில் எவ்வாறு ஒலித்தது? காமப்பொருட்களாய்ப் பல நூற்றாண்டுகளாய்க் காணப்பட்ட தேவதாசிகள் சமூகத்தில் பிறந்து, உத்தமியாய் மாறிய இராமாமிருதத்தம்மாள் பொது மேடைகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏறி நின்றது எப்படி இருந்திருக்கும்? அரை நிர்வாணமாக, வனராணியாக நடித்த தவமணி, முதல் முதலில் திரை அரங்கில் நுழைந்தபோது அவள் உடல் எப்படிக் காணப்பட்டது?
அவர்கள் காமக் கருவிகளாகக் காணப்படுவதை ச் சுட்டிக்காட்டும் பெண்ணிய அரசியல் இன்றியமையாதது. உரிமை சார்ந்த சொல்லாடலின்முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர்கள் கணக்கை அவ்வளவு சுலபமாக முடித்துவிடவும் முடியாது. உரிமைகளைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன் பேசிய வரலாறு சிறப்புமிக்கதாக இருந்தாலும், பெண்ணிய வரலாறு என்பது மற்றைய வரலாறுகளைப் போல வார்த்தைகளால் மட்டுமே கூறப்படுவதாக இருந்தால் மட்டும் போதாது. இந்நிலையில், அழகியலுடன் மேடையில் இந்த வரலாறு அரங்கேறுவது பயனுள்ள உத்தியாகிறது. அதை விமர்சிக்கவும் ஆணாதிக்க நிறுவனங்களின் கருவைக் கேள்வி கேட்பதிலும் உடல்சார்ந்த சர்ச்சைகளை அரங்கேற்றுவது உதவக்கூடும். இன்று பெண்ணிய வரலாற்றை எழுதும்போது அன்று அவர்கள் கூறிய கருத்துகள் நம்மைச் சிந்திக்க வைப்பது மட்டுமல்லாமல், அவ்வுடல்களின் ஆக்கமும் நிகழ்த்துதலும் ஒரு வரலாறாகும். 18, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெண்களின் கதையைச் சொல்லும் இன்றைய பெண்ணிய வாதிகளான எமக்கு, பொது வெளியில் முன்பு காணப்படாத, இன்றும் குறைந்தே காணப்படும் உடல்களைப் பற்றிய சொல்லாடல்களில் ஈடுபடுவது அவசியமாகிறது. இதனால் பால் சார்ந்த வித்தியாசங்களும் அவற்றில் அடங்கியுள்ள அடக்குமுறையும் வெளிவர வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ஆணாதிக்கச் சமுதாய அடக்குமுறைகள், பால் சார்ந்த வன்முறைகள், பாலியல் சார்ந்த அடக்குமுறைகள் ஆகியவற்றைப் பற்றிய பெண்ணிய வாதங்களைப் புரிந்துகொள்ளமுடியும். இன்று பாலியல் தொழிலாளிகளும் ஒருபால் உறவிலுள்ள பெண்களும் சந்திக்கும் பால் சார்ந்த வன்முறையும், பொதுவாழ்வில் உள்ள பெண்கள் சந்திக்கும் சவால்களும், குடும்ப வன்முறையும், பெண் உடலின் இச்யல்யை எழுதிய இன்றையப் பெண் கவிஞர்கள் சந்தித்த வன்முறைகளும் பெண்ணிய நோக்கின் கருவில் உள்ள உடல் சார்ந்த சொல்லாடலைக் குறிக்கின்றன.
இப்பனுவலின் மற்றொரு சர்ச்சை பெண்ணியவாதிகளின் ஒன்று கூடலும் அதில் எழும் விவாதங்கள் பற்றியதாகும். பல நேரங்களில் பெண்ணியவாதிகள் தனித்து பணிபுரிகின்றனர். ஒன்று கூடினாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைப் பற்றிய பிரச்சாரத்துக்காக மட்டுமே கூடும் இந்தக் காலத்தில், இந்த நாடகத்தில் ஒன்று கூடி, மனதளவில், உடலளவில் நெருங்கிய முறையில் ஆறு பெண்ணிய வாதிகள் ஒன்று கூடியுள்ளனர். எனது நோக்கம் இதைக் கொண்டாடுவது மட்டுமல்ல. அக்கொண்டாட்டத்தோடு நிறுத்திவிடாமல் அந்த நிகழ்வு முறை பற்றி எழுதுவேண்டிய அவசியமுள்ளது. நாங்கள் அனைவருமே, முன்பு கூறியது போல, வெவ்வேறு வரலாறுகளில் இருந்து வருபவர்கள். ஒருபால் உறவு போன்ற நெருக்கமான விவரங்களைத் தோழிகளாக மட்டும் புரிந்து கொள்ளாமல் அரசியலாகவும் புரிந்து கொள்ளும் தன்மை எம்மிடம் இருந்தது.
இடதுசாரி இயக்கங்களிலிருந்து பெண்ணிய நோக்கு சார்ந்த வாக்குவாதங்கள் ஏற்கபடாததால் வெளியேறியவரும், இன்றும் கட்சியில் பணியாற்றுபவரும் அமர்ந்து அவ்வரலாற்றைப் பற்றி பேசினோம். செயல்வாதம் சார்ந்த (Activism) பணிகளுக்கும் ஆராய்ச்சி (Research) சார்ந்த பணிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசமும் ஒற்றுமையும், அவை இரண்டிற்கும் இடையிலான மங்கலான கோடுகளும் வெளிக் கொணரப்பட்டன. அவரவர் வேலையில் உள்ள பெண்ணிய வெளி பேசப்பட்டது. அவரவரது தனி வாழ்வில் பெண்ணிய நோக்கைப் பற்றித் தோழிகளாக, அரசியல் செறிவோடு குறித்துப் பேச முடிந்தது. எம்முள் இருந்த வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும் பட்டியலிடுவது எனது நோக்கம் அல்ல. எமது கலந்துரையாடலின் முறையியலே எனக்கு முக்கியமானது.
ஒரு புறம் ஒருவருக்கொருவர் சொல்லுவதைக் கூர்ந்து கேட்பதும் அங்கீகரிப்பதும் மதிப்புடன் வாதிடுவதும் முக்கிய முறையாக இருந்தது. இன்னொருபுறம், ஒரு பெண்ணிய நோக்கிற்கான தேடல் எங்கள் அனைவரிடமும் பொதுவாக அமைந்திருந்தது. இத்தேடலின் மகிழ்ச்சியும் துக்கமும் பகிர்ந்து கொள்ளக் கூடியதாகப் பின்னர் மாறியது. பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் தேசியப் பெண்கள் இயக்கங்களின் தேசிய மாநாடு ஒன்று நடந்தது. இன்றும் இந்தியப் பெண்ணிய வரலாற்றில் ஒரு முக்கியப் புள்ளியாக அம்மாநாடு திகழ்கிறது எனலாம். இது எந்தவித நிதி உதவியும் இல்லாமல் நாடளாவிய பெண்ணிய அமைப்புகள் சேர்ந்து நிகழ்த்தியதாகும். இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதில் வ. கீதா பங்கேற்றார். ஒருநாள், நாடகப்பயிற்சியின் போது ‘கள்ளிக்கோட்டை மாநாட்டிற்கு அப்புறம் எனக்கு இப்படி ஒரு உணர்ச்சி இன்றைக்குதான் வந்திருக்கு என்றார்’.பெண்ணிய வரலாறு சார்ந்த உரையாடல்களுடன் வளர்ந்த எனக்கு இதைவிட பெரிய பாராட்டுக் கிடையாது. இதலிருந்து இரு விஷயங்கள் தெரியவருகின்றன. ஒன்று, பெண்ணிய ஒருங்கிணைப்புகள் நெருங்கிய, உணர்வுப் பூர்வமான, பரந்த அரசியல் சார்ந்து அடிக்கடி நடப்பதில்லை என்பது. இரண்டு, இப்படிப்பட்ட ஒருங்கிணைதல் சாத்தியம் என்பது.
நாங்கள் ஆறு பேரும் இந்நாடகத்திற்குப் பிறகு எல்லா நேரத்திலும் ஒன்றாகப் பணிபுரிவோம் என்று கூறமுடியாது. இன்னொரு முறை நாங்கள் சேர்ந்து பணிபுரிய வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். ஆனால், இந்த நாடக ஆக்கத்தின் மூலம் தோழமை மட்டும் அமையாமல் பெண்ணிய அரசியலைப் பற்றி கூர்ந்து வாதாடுவதற்கு ஒரு களமும் அமைந்தது எனலாம். எல்லாவற்றிக்கும் மேல் ஒரு பெண்ணியக் கனவைக் காலக் கனவு மூலம் சில கணங்களிலாவது பகிர்ந்துகொள்ள முடிந்தது. இத்தகைய கணங்களில்தான் சமூக மாற்ற சிந்தனைகளுக்கான வலிமைகள் உள்ளன என்று வரலாறு நமக்குக் கூறுகிறது. ஆதலால் இவற்றை முக்கிய அரசியல் தருணங்களாகக் கருதுவது அவசியமாகும். இக்கணங்களில் வேறுபாடுகளை இழக்காமல் அவற்றைத் தாண்டி வளரக்கூடிய அன்பும் தோழமையும் சார்ந்த சமூக மாற்ற செயல்பாடுகளுக்கான அறவியலைப் பேணுதல்கூடும்.
இந்நாடகத்தின் இன்னொரு அம்சம் தமிழகப் பெண்ணியத்தின் வரலாறு என்பதாகும். ஆங்கிலத்தில் மேடையில் பேசி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சுயமரியாதை இயக்க அறிவாளிப் பெண் குஞ்சிதம் தொடக்கம், தனித்தமிழ் இயக்கங்களில் பெண்களின் பங்கு வரை, இந்நாடகத்தில் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றில் பல பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அனைத்துச் சமூகங்களிலும் பெண்ணியவாதிகளிடமும் அடிக்கடி வைக்கப்படும் குற்றச்சாட்டு, நீங்கள் போதுமான அளவு தமிழர் அல்ல என்பது. இதனை நாம் அனைவரும் அறிவோம். இந்நாடகத்தில் பல வகையான தமிழ் பேசும் பகுதிகளின், தமிழ்ச் சமுதாயத்தின் தெள்ளத் தெளிவான பெண்ணிய வரலாறு காட்டப்பட்டுள்ளது. இன்னொருமுறை நம்மை ‘ஃபேன்ட் மாட்டிய, கிராப் வெட்டிய நீ, தமிழ்ப்பெண் அல்ல’. ‘தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் இப்படி இருப்பதில்லை’ என்று கூறுபவர் முகத்தில் வீசி எறிய வரலாறு ஒன்று உள்ளது. வேட்டி, சட்டை அணிந்து தலித்துகளுடன் வாழ்ந்து, சைக்கிள் ஓட்டித் திரிந்த கம்யூனிஸ்ட் மணலூர் மணியம்மா உள்ளார்.(ஒரு சில ஆங்கில வார்த்தைகளை வசனத்தில் சேர்த்துக் கொள்ளலாமா?என்பது பற்றிப் பேசிய போது ‘தமிழ் பேசும்’ இடத்தில் பிறந்துள்ளோம், அவ்வளவுதான், என்றார் வ. கீதா.)
கொண்டாட்டத்திற்குரிய இவ்விஷயங்களைக் கொண்டாடுதல் மட்டும் போதாது. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து புரிந்து கொள்ளலும் அவசியம். கலாச்சாரம், சமூகம் என்று அழுத்திப் பொறுத்தப்பட்ட வரையறைகளிலுள்ள தெளிவற்ற நிலையும் பால், சாதி, இடம், மதம், பாலியல் சார்ந்த கீழ்நிலைப்படுத்தலும் அடக்குமுறையும் தெள்ளத்தெளிவாக இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று வலிந்து புகுத்தப்படும் ‘கலாச்சார வன்முறை’களின் தாக்கத்தை நாம் அறிவோம். வெவ்வேறு சமூகங்களின் பெண்ணிய விவாதங்களில் இது பேசப்பட்டுள்ளது. ஆனால் இதைத் தாண்டி மரபு/கலாச்சாரம் என்ற சொல்லாடலை ஒற்றுமை மற்றும் சமநிலைக்கான உத்தியாகப் பயன்படுத்தலைப் பற்றி யோசித்தல் அவசியம். மரபுகளை அங்கீகரித்தல், அறிதல் மற்றும் பாதுகாத்தல் முக்கியமாக இருந்தாலும் அவற்றை வழிபடும் வழக்கத்தைக் கேள்வி கேட்டல் அவசியம். இவ்வழிப்பாட்டினால் ஊக்குவிக்கப்படும், அசைக்கமுடியா வரையறைகளும் அவைச் சார்ந்த வன்முறையும் தமிழகப் பெண் கவிஞர்கள் தாக்கப்பட்டபோதோ, ஒரு பத்திரிக்கையில் பாலியல் வாழ்வைப் பற்றி ஒரு வரி பேசிய குஷ்புவிற்கு எதிரான பிரச்சாரத்திற்கோ கருவாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை.
இந்நாடகத்தின் இறுதியில் தமிழகத்தில் இவ்வளவு முற்போக்காக இருந்த பொதுவெளி எங்க போச்சு? என்றும் இந்த வரலாற்று முறிவின் அர்த்தமென்ன? என்றும் வாதிக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழ் பேசும் பல பகுதிகளிலும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்தியாவில் வேறேங்கும் காணப்படாத தெளிவான அறிவார்ந்த, துல்லியமான, ஆழ்ந்த, பரந்த முறையிலான சொல்லாடல்களை முத்துலட்சுமி முதல், சுயமரியாதை இயக்கப் பெண்கள் வரை கண்ட தமிழகம், இன்று மாறிவரும் பண்பாட்டைக் கேள்விகேட்டு, அதனை ரசிக்கும் தன்மை இன்றி, சாதி, மதம், பால்சார்ந்த அடக்குமுறையில் மூழ்கியுள்ளது. பெண்நிலை, பெண்கருத்து, இருப்பு ஆகியவற்றிக்கு இங்கு இடமில்லாமல் போன காரணம் என்ன?
தொடக்கப் புள்ளியாக, நமது தற்கால பெண்ணிலைவாதக் கோட்பாடுகளையும் பணிகளையும் விமர்சனபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் மறுபரிசீலனை செய்வது இன்றியமையாததாக உள்ளது. வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் தமிழ்ப் பெண்ணியத்தைக் கோட்பாட்டுரீதியாக பயன்படுத்துவது தேவையற்றது. இந்த மறுபரிசீலனையின் நிகழ்முறையும் சொல்லாடலும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், கண்டிப்பாகப் பல பெண்ணியங்களுக்கு இது பொருந்தும். எங்களால் அனுபவிக்க முடிந்த இவ்வரலாற்றின் உற்சாகத்தை அருகில் அணைத்து வைத்து, அசாத்தியமான வலிமையும் கனவுகள் காண்பதற்கான தைரியத்தையும் சேகரிக்க முயல்கிறோம்.
‘காலப் பயணத்தின் சரடுகளை அங்கீகரித்து அதற்கு மேலாக நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நம்முன் உள்ள சவால். கேள்விகளுக்கு முடிவேயில்லை.’