மங்கைத் தமிழ் நாடக உலகில் பல ஆண்டுகளாக முக்கியப் பணிபுரிந்து வருபவர். அவரது மரப்பாச்சிக் குழுவில் நான் ஒரு நடிகன். இதற்கு முன் இக்குழுவோடு குறிஞ்சிப்பாட்டு நாடகத்தில் பணிபுரிந்துள்ளேன். ஆனால், காலக்கனவு நாடகம் வேறு வகைப்பட்டது. இதில் பங்கேற்ற நடிகர்கள் அனைவரும் பெண்கள். இப்பெண்கள் குழுவோடு பணிபுரிந்த எனக்கு, இந்த அனுபவம் மறக்க முடியாததாக அமைந்தது. இக்குழுவில் செயல்பட்ட ஒரேஆணாக நான் இருந்தேன்.
நான் சந்தித்த பிற பெண்கள் போன்றவர்களல்ல இப்பெண்கள். தத்தம் வாழ்வில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள். இன்று என்னுள் உள்ள பல தன்மைகளை நான் இப்பெண்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமான ஒன்று ‘பொறுப்புடன் இருத்தல்’. இந்நாடகத்தில் வரும் வசனத்தில் ஒன்று, ‘ஆண்களை எப்படி பொறுப்புள்ளவர்களா ஆக்குவது?’ என்பதாகும். இந்நாடகத்தின் மேடையாக்கத்தில் பங்கேற்ற எனக்குள் இந்த ஒரு வரி வசனம் பல்வேறு சிந்தனைகளைத் தூண்டியது.
என் வாழ்வின் பல கணங்களைப் பற்றி நான் மறு பரிசீலனை செய்தேன். இவர்கள் அனைவரும் என்னுள் பல மாற்றங்களைக் கொண்டு வந்தனர். நாடக முடிவில் என்னை அறிமுகம் செய்யும்போது, குழுவின் ஒரே ஆண் எனச் சொல்வார்கள். நடைமுறையில் எங்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. சிறு குழந்தைகள் போல் உணவு, உடை அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம். மனதார்ந்த நட்பு சாத்தியமாயிற்று. பெரியாரின் அரசியல் சிந்தனை பற்றிப் பெயμளவில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு, இப்பெண்களே பெரியார் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினர். இதன்பின், நான் பெரியார் எழுத்துக்களை வாசிப்பதில் இறங்கினேன். நாடகக் குழுவுடன் தமிழகம் முழுவதும் சென்ற பயணங்களில் பலரைச் சந்தித்து சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டேன். அந்த நாட்கள் மறக்க முடியாதவை.
நாடகத்தின் ஒரு காட்சியில் தேவதாசிகளாக ஆக்கப்படும் குழந்தைகள் குறித்தது. ‘நான் இழந்த வாழ்க்கையை நாணம் விட்டுச் சொல்லவா?’ என்ற பாடலைக் கவின்மலர் பாடுவார். ஒவ்வொரு முறை அப்பாடலைக்கேட்கும்போதும், என் மனம் சோகத்தில் அழும். குழந்தைகள் இளம்வயதிலேயே தேவதாசிகளாக ஆக்கப்படுவது அல்லது பிறருக்குவிற்கப்படுவது குறித்து இப்பாடல் கூறும். இதுபோன்ற பல உணர்வுப்பூர்வமான கணங்களை இந்நாடகம் காட்டியது.நான் செய்யும் பணிகளை வடிவமைத்ததில் காலக் கனவுக்குப் பெரும்பங்கு உண்டு.
No comments:
Post a Comment