Wednesday, April 7, 2010

முச்சந்தியில் அரங்கேறிய பெண்விடுதலை வரலாறு - வ. கீதா

பெண் விடுதலை அரசியலில் ஈடுபடுவோர், தாம் செய்ய நினைக்கும் விஷயங்களை யாரேனும் இதற்கு முன்னால் செய்துள்ளனரா, அல்லது தாம்தான் முதன்முதலில் செஉ#கிறோமா என்ற ஐயப்பாட்டுடனும் அச்சத்துடனும் செயல்படுவது வழக்கம். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு தலைமுறையும் பெண் விடுதலையைக் கையிலெடுக்கும்போது பெண்ணடிமைத்தனம் குறித்து ஏன் இதுவரை யாரும் போதுமான வரைக்கும் பேசவில்லை என்று அதிசயித்துக் களமிறங்குவதைக் காணலாம். நமக்கு முன்னால் வாழ்ந்த, செயல்பட்ட பெண் விடுதலையாளர்கள் பற்றிய சித்திரங்களுக்கு நமது கூட்டுநினைவில் இடம் வழங்கப்படுவதில்லை என்பதால் நாம் ஒவ்வொருவரும் தட்டுத்தடுமாறி, அடிபட்டு, அனுபவப்பட்டுப் பெண்விடுதலை அரசியலைக் கண்டுபிடிக்க வேண்டியதாகிறது. அப்படிச் செய்யும் போது, நமக்கு முன்னால் செயல்பட்ட பெண் விடுதலையாளர்களைப் பற்றிய துண்டுதுக்காணியான செய்திகள்கூட நம்மைக் கிளர்ச்சியடையச் செய்யும். வெறும் அறிவு சம்பந்தப்பட்ட கிளர்ச்சியாக இல்லாமல், நமது உணர்வுகளை, மனத்தை, ஏன் முழுநினைவையுமே அது ஆட்கொண்டு, திரும்பவும் திரும்பவும் வரலாற்றைத் தேடிச் செல்லத் தூண்டும்.

அத்தகையதொரு தூண்டுதலின் பெயரில் குறைந்தது பத்து வருடங்களாவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம், பல்வேறு நூலகங்களைத் தேடிச் சென்று, பழைய ஏடுகள் பலவற்றை புரட்டிப்பார்த்தேன். கடந்த இருநூறு ஆண்டுகால வரலாறு குறித்துப் பேசும் புனைகதைகள், கட்டுரைகள், பாடல்கள், டைரிக்குறிப்புகள் முதலியவற்றை வாசித்துக் குறிப்பெடுத்தேன். படித்த நூல்களையே மீண்டும் படித்தேன். அவர்களாக சொன்னவை, எழுதியவை போக, எதிர்பாராத இடங்களிலும், ஆண் எழுத்தாளர்களுடைய சொற்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டும், அச்சொற்களால் மறைக்கப்பட்டும், ஆண் அறிவாளிகள் புனைந்த சொல்லாடல்களின் இடுக்குகளிலும் பெண்விடுதலையாளர்கள் விட்டுச் சென்றிருந்த பதிவுகளை அடையாளங்கண்டேன். அவற்றை முறையாகத் தொகுத்து எழுதவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும், அவற்றை வைத்துக் கொண்டு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன். இப்பெண்களைப் பற்றி தொடர்ந்து நிறையபேருடன் பேச வேண்டும் போலிருந்தது. பாருங்கள், பெண்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்று உரத்து முழக்கமிட வேண்டும் போலிருந்தது.

ஆனால் வெறும் பெருமைப் பேச்ச்சாக இது தங்கிவிடக்கூடாது என்ற கவலையும் இருந்தது. வரலாற்றை நாம் அறிய நினைப்பது அதனை ரசிக்க மட்டுமல்ல, எண்ணி சிலாகிக்க மட்டுமல்ல, நமது சமகால அக்கறைகளை மேலும் ஆழமாக புரிந்துகொள்ளவும் வரலாறு தேவைப்படுகிறது என்றும் தோன்றியது. அதுவும், பெண்விடுதலைச் சிந்தனையின் வரலாற்றைப் பொருத்தமட்டில், பெருமையடைவதென்பது ஒருபுறமிருக்க, அச்சிந்தனையாளர்கள் யார், எத்தகைய சூழ்நிலைகளில் சிந்திக்க வந்தனர், அச்சூழ்நிலைகளை கடந்து சிந்தித்தனர், அவற்றுக்கு உட்பட்டும் முரண்பட்டும் அவற்றால் கட்டுப்படுத்தப்பட்டும் இதைச் செய்தனர் என்பன போன்ற கேள்விகளே, சமகாலக் கேள்விகளுக்குப் பதில் தேடுவோருக்கு முக்கியமானதாகி விடுகின்றன. குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலை பெண்விடுதலையாளர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதைப் புரிந்து கொண்டால், நாம் செயல்படும் காலஇணைவைப் பற்றிய நமது புரிதல் செழிப்படையும்; செயல்பாடு கூர்மை பெறும் என்ற நமது நன்னம்பிக்கையே இதற்குக் காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்தகாலத்தையும் நம்காலத்தையும் பிணைக்க நினைக்கும் ஆவலில், தேடலில் நாம் ஆய்ந்தறியும், வரையும் வரலாறானது நம்முடைய அரசியல் செயல்பாடுகளுக்குரிய வரலாறாகவும் உத்திரவாதமாகவும் அமைந்துவிடுகிறது.

இந்தவொரு மனநிலையில்தான், அச்சாக, எழுத்தாக, வெறும் அறிவுவாதமாக இல்லாமல், பொது அறிவிப்பாக, பொதுச்செய்தியாக நவீனயுகப் பெண்விடுதலைச் சிந்தனை மரபை அறிமுகப்படுத்த முடியுமா என்ற கேள்வியுடன் மங்கையை நச்சரிக்கத் தொடங்கினேன். சங்ககால பெண்களைச் சமகாலத்துக்குக் கொண்டு வந்து அரங்கேற்றிய மங்கையின் அளிக்கைகளைக் (மணிமேகலை, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றை) கண்ட அனுபவத்தின் பெயரில், உரிமையில் இந்த நச்சரிப்பைத் தொடங்கினேன். வேறுவேறான வரலற்று, பண்பாட்டுச் சூழ்நிலைகளில், பெண்மை, பெண்ணின் இருப்புக் குறித்துச் சொல்லப்பட்டவற்றை, தற்காலத்துக்குரிய வகையில் அவள் மேடையேற்றியிருந்த பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தனிப்பட்ட முறையிலும், கருத்துரீதியாகவும் எங்களிடையே வளர்ந்திருந்த தோழமையும் மங்கையுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது. சங்க காலத்திலேயே இருந்தா எப்படி? ‘நம்ம காலத்தப் பத்தி, பெண்ணிய நோக்கில் ஏதாவது செய்யலாம்என்று நான் சொன்னதும், ‘நீ எழுது, நாம் செய்யலாம்என்ற பதில் கிடைத்தது.

வரலாற்றை ஆய்ந்தறிய முற்படுவோர் பலநேரங்களில் தனியாகவே வேலை செய்ய வேண்டியுள்ளது. நூலகங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படிப்பதும், குறிப்புகள் எடுப்பதும் அமைதியில் நடக்கும் வேலைகள்தான். யாரைப் பற்றி, எதைப் பற்றிப் படிக்கிறோமோ, எழுதுகிறோமோ அவர்களுடன் மனதளவில் உரையாடுவதும், ஒவ்வொரு கணமும் அவர்களுடன் வாழ்வதும், கனவு காண்பதும் தொடர்ந்து ஒருவரது பிரக்ஞையில் மௌன நாடகமாக நடைபெறுவதும் வழக்கம். இந்த மௌன விசாரணையை எழுத்தினூடாக செய்யும் போதும்கூட அம்மௌனம் கலைவதில்லை. புத்தகம் வெளியானவுடன் வரும் விமர்சனங்களை எதிர் கொண்டாலும், புறக்கணித்தாலும் பொதுவில் வைத்து இவற்றை நாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஆனால் வரலாற்றை நாடகமாக்கி மேடையேற்றும் போது இவ்வாறு செய்ய முடியாது என்பதை உணர்ந்து நான் செயல்படவேண்டியிருந்தது.

பொதுவாக வரலாறு என்பதில் நம் அனைவருக்கும் ஏதோவொரு ஆர்வம் இருக்கவே செய்கிறது. நீ பள்ளிக்கூடம் போனபோது எப்படியிருந்ததுஎன்று அம்மாவைப் பார்த்து மகள் கேட்கும் கேள்விக்கும் பெண் கல்வி குறித்து வரலாற்றாசிரியர் கேட்கும் கேள்விக்கும் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. மேலும் வரலாறு என்பதை நாம் எல்லோருமே சொந்தம் கொண்டாட நினைக்கிறோம். ஊர், சாதி, சமயம் என்ற ரீதியில் மட்டுமில்லாமல், நமக்குப் பிடித்த நபர்கள், காலக்கட்டங்கள், நிகழ்வுகள், கருத்தியல் என்பனவற்றைக் குறித்த உண்மைகளை நிலைநிறுத்துவதில் நம் அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது. பலவகையாக உள்ள, பல நிலைகளில் வெளிபடும் இந்த ஆசைக்கு எவ்வாறு ஈடுகொடுக்கப் போகிறோம்; அதுவும் பெண்கள் குறித்த செய்திகளை வழங்கும்போது, பொது நினைவுத்தடத்தில் கசடெனப் படிந்து கிடக்கும் படிமங்களைத் துடைத்துப் போட்டு புதிய செய்திகளை அல்லது பழைய செஉ#திகளையே புதிய பாணியில் எவ்வாறு கொண்டு செல்லப் போகிறோம் என்ற கவலையும் இருந்தது.

பாரதியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெண்கள், காந்தியுகத்தில் பொது சேவைக்கென வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், கிறிஸ்தவத்துக்கு மாறி அதனால் ஏற்பட்ட சமூக எதிர்வினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த பெண்கள், சுயமரியாதை இயக்கப்பெண்கள், தேவதாசிப் பெண்கள், இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்... இவ்வாறாக, பல்வேறு சூழல்களில் சமத்துவம், உரிமை, பொதுநலம், மகளிர் நலம், பெண் விடுதலை, முன்னேற்றம் குறித்துப் பேசிய, சிந்தித்த பெண்களுடைய எழுத்துகள், சொற்பொழிவுகள், பிறர் இத்தகையப் பெண்களை பற்றிக் கொண்டிருந்த கருத்துகள் என வரலாற்றுப் பதிவுகளாகவும், புனைகதைகளிலிருந்தும் ஏராளமான செய்திகளைத் திரட்டி வைத்திருந்தேன்.

மங்கை நீ நாடகம் எழுதிக் கொடுஎன்றவுடன், பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றிய செய்திகளை முதலில் தொகுத்தேன். எதைத் தேர்ந்தெடுப்பது, எதை விடுவது என்ற பிரச்சனை ஒருபுறம், மறுபுறமோ, தேர்ந்தெடுத்தவர்களின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பொருள்தரக்கூடிய வரலாற்றுப் பின்னணியை எவ்வாறு வழங்குவது என்ற பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கைவசம் இருந்த பெண்களின் பதிவுகளைக் குரல்களாக பாவித்து, அக்குரல்களுக்கிடையே நடக்கும் உரையாடலினூடாக வரலாற்றை மேடையேற்ற முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தேன். பாரதியுகப் பதிவுகளை நாங்கள் நாடகத்தில் நடிப்பதற்கென்று தேர்வு செய்திருந்த பொன்னி, கல்பனா, கவின்மலர், ரேவதி ஆகியோர் படித்துக் காட்டிய போதுதான், இப்படிச் செய்வதைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வந்தது.

மங்கை, வரலாற்றின் நுணுக்கங்களை மேடையேற்ற வேறு சில உத்திகளைக் கையாளலாம் என்றார். நாடகத்தில் இடம் பெறும் பெண்களின் புகைப்படங்கள், அவர்களது கட்டுரைகள் வெளிவந்த இதழ்களின் அட்டைப் படங்கள் ஆகியவற்றை கொண்ட போஸ்டர்களை உருவாக்கி மேடையில் தோரயமாகத் தொங்க விடலாம் என்று யோசனை கூறினார். இவற்றை மேடைப்பொருட்களாக தான் பாவிக்கப் போவதாகவும் கூறினார். காலத்தாலும் மறக்கப்பட்ட பெண்களின் படங்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது பெரிய வேலையாகிப் போனது. ஏற்கனவே வெளிவந்திருந்த புத்தகங்களிலிருந்து சில படங்களை நகலடுத்தோம். சிலவற்றைப் பிறரிடம் கேட்டுப் பெற்றோம். தோழியர் மைதிலி சிவரõமன், வி. ஆர். தேவிகா ஆகியோர் தங்கள் கைவசமிருந்த படங்களைத் தந்தனர். பெண்களின் எழுத்துகள் வெளிவந்த இதழ்களின் முகப்புகளைச் சென்னையிலுள்ள ராஜா முத்தையா நூலகத்தார் தந்து உதவினர். போஸ்டர்களை வெறும் படச்செய்திகளாக அல்லாமல், கூட்டுநினைவில் நாங்கள் நிலைபெறச் செய்ய விரும்பிய சித்திரங்களாக, வரலாற்று அறிவிப்புகளாக ஆக்க வேண்டும் என்பதற்காகப் பலநாட்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. நண்பர்கள் செந்தில்செல்வன், ஆறுமுகம் ஆகியோர் பழைய மங்கிய படங்களுக்கு ஒளியூட்டி, சிதைந்த முகங்களைச் சரிசெய்து, மிக நேர்த்தியான போஸ்டர்களை உருவாக்கினர். வாசகங்களைக் குறைத்துப் படங்களைப் பேச வைத்தவர்கள் இவர்கள் தான். (நாடகம் அரங்கேறிய ஒவ்வொரு வெளியிலும், நாடகம் நடந்து முடிந்த பிறகு பலர் போஸ்டர்களைக் காணத் திரண்டது எங்களை உவப்படையச் செய்தது.)

இவ்வாறு, பலவிதமாக வேலை செய்து நாடகத்துக்கான பிரதியை உருவாக்கும் போது, அனுதினமும் புதிய பிரச்சனைகள் தோன்றின. எழுத்துக்கு உதவும் தடயங்களையும் செய்திகளையும் உள்ளவாறே மேடைக்குக் கொண்டு போக முடியாது என்பதை, எழுதியவற்றை நடிகர்கள் நடித்துக் காட்டுகையில்தான் புரிந்து கொள்ள முடிந்தது. உதாரணத்துக்கு, கிறிஸ்தவத்துக்கு மாறிய பெண்களின் வாழ்க்கை குறித்து மேலும் சில தகவல்களைச் சேகரித்தால் மட்டுமே அந்த படலத்தை சரிவர மேடையேற்ற முடியும் என்று பட்டது. மங்கையுடன் இது பற்றி பேசியபோது, ‘இதைப் படித்துப்பார்என்று ஜாய் ஞானதாசனின் மங்களாவடி கதைகளைப் படிக்கக் கொடுத்தார். எனது தோழி சாலைசெல்வம் என்றோ படிக்கக் கொடுத்த, தென் தமிழகத்தில் சிறந்த கல்வி பணியாற்றிய ஏமி கார்மைக்கேல் என்பாரின் வாழ்க்கை வரலாறும் இந்த சமயம் நினைவுக்கு வந்தது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கிறிஸ்தவம் தன்மதிப்பை வழங்கியதை தர்க்கமாக மட்டும் முன்வைக்காமல், காட்சியாக ஆக்கவும் உணர்வுப்பூர்வமான வகையில் வெளிப்படுத்தவும் இந்த நூல்கள் உதவின.

கிறிஸ்தவம் பெண்விடுதலைக்கு வழிவகுத்த கதை இன்றும்கூட அறியப்படாதக்கதையாகவே உள்ள சூழலில், அதைச் சரிவரச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். மேலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்களைத் தமிழ் அடையாளத்துக்குள் அவசரஅவசரமாக அடக்காமல், அந்த அடையாளத்தை, பெண்விடுதலை என்ற கோணத்திலிருந்து கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெண்கள் எவ்வாறு வரையறுத்தனர் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்பினோம். இதனாலேயே இந்த படலங்களைக் குறித்த பதிவுகளுக்குக் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நாடகத்தை எழுதி முடித்த பிறகு, அதன் ஒவ்வொரு கட்டம் குறித்த விவாதங்களையும் நடத்தினோம். குறிப்பிட்ட வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது நடிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், ‘எனக்கு இது சரியான வாதமாகத் தோன்றவில்லைஎன்றரீதியில் எழுந்த கேள்விகள், வரிகளைச் சொல்லிக்கொண்டு நடக்கையில், பாடுகையில் ஏற்பட்ட சிக்கல்கள், ஒத்திகைக்கு வருவதற்கு முன்னும் பிறகும் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் – விவாதங்கள் உருவாக இவை போன்ற தருணங்கள் காரணமாக இருந்தன. தேவதாசிகளின் உரிமைகளைப் பேசும் பகுதியைப் படித்த மாத்திரத்திலேயே நிறைய கேள்விகள் எழுந்தன. நமது காலப் பெண் விடுதலைப் பார்வை என்பதை அளவுகோலாகக் கொண்டு, கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை மதிப்பிட முடியுமா என்பதாகத் தொடங்கிய வாதம், தாம் சொல்ல வரும் வித்தியாசமான, மாறுபட்டக் கருத்துகளுக்கு ஒப்புதல் பெறப் பெண்கள், அன்றும் இன்றும் அமைத்துக் கொண்ட சொல் அரண்களைப் பற்றிய சுவையான விளக்கமாக விரிந்தது. இந்த விவாதத் தொனி, அக்கட்டத்தை மங்கை காட்சிப் படுத்திய விதத்திலும் தொழிற்பட்டது. முதல் சில மேடையேற்றங்களுக்குப் பிறகும் கூட இந்தக் கட்டத்தைப் பற்றிய கேள்விகள் எங்களைத் துரத்தின. சேலத்தில் நாடகம் மேடையேற்றப்படும் முன்னர், மங்கை இந்தப் பகுதியை முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைத்தார்.

பெண்களைப் பொது வாழ்க்கைக்குக் கொண்டு சேர்த்த, அவர்களைச் சமத்துவம், நீதிக்கான தேடலில் செலுத்திய இயக்கங்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்கள் நாடகத்தின் முக்கியமான பகுதியாக இருந்தன. தொடர்ந்து விவாதிக்கப்பட்ட பகுதியாகவும் அது ஆகிப்போனது. தஞ்சையில் நாடகம் போட நாங்கள் ரயிலில் செல்லும் போது இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்ட பெண்களைச் சிலாகித்துப் பேசிய அளவுக்கு அவ்வியக்கத்தைப் பற்றி நாம் விமர்சிக்கத் துணியவில்லை என்று ஒருவர் கருத்துரைக்க, அதுவே ஒரு பெரும் விவாதமாகி, நாடகத்தில் புதிய வரிகளாகப் பரிணமித்தது. திருச்சியில் நாடகத்தைக் கண்ட கிறிஸ்தவத் தோழி ஒருவர், கிறிஸ்தவத்தைப் பற்றிய வரலாற்றுப் பதிவு, குறிப்பாக பெண் விடுதலைக்கு அது வழிவகுத்தது குறித்த பதிவு முக்கியமானதுதான் என்பதை ஏற்றுக்கொண்டார். அதேசமயம், கிறிஸ்தவத்தில் இன்று வரைக்கும் சாதி வேறுபாடுகள் பாராட்டப்படுவதை நாங்கள் பதிவு செய்யாமல் விட்டதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டினார். இது பற்றி நாங்கள் விவாதித்தோம். அந்த விமர்சனத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சில மாற்றங்களைச் செய்தோம். இப்படிப் பல நிலைகளில் நாடகத்தில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன, திருத்தங்கள் செய்யப்பட்டன.

இடதுசாரி இயக்கத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட சில பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வியக்கத்தில் பங்காற்றிய பெண்களைப் பற்றிப் போதுமான செய்திகள் அவ்வியக்க வெளியீடுகளில் இடம் பெற்றிருக்கவில்லை. (எனக்குக் கிடைத்த குறைந்தபட்சத் தகவல்களைக்கூட தோழர் மீனா கிருக்ஷ்ணசாமியுடன் நானும் ரேவதியும் மேற்கொண்ட நேர்காணலின் முலமே பெற முடிந்தது). இதனால், இடதுசாரி இயக்கத்தில் பெண்கள் செயல்பட்ட விதத்தைப் பற்றிய பதிவுகளை மேடையேற்றுவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. பாரதி யுகம், சுயமரியாதை இயக்கம், கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெண்கள் ஆகியோரது எழுத்துகளை மேடையில் நேரடியாக அறிமுகம் செய்ய முடிந்ததைப் போல கே.பி. ஜானகி அம்மாளின் பேச்சுகளையும் நிலைப்பாட்டையும் முன்நிறுத்த உதவும் செய்திகளைப் பெறமுடியாமற்போனதால் அதைச் செய்ய முடியவில்லை. மணலூர் மணியம்மாவைப் பற்றி மங்கை ஏற்கனவே நிகழ்த்தியிருந்த நாடகத்தை ஒட்டியும் சில காட்சிகளை அமைக்க முடிந்தது. அடர்த்தியான செய்திகள் இல்லாததால், நாடகத்தின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், இந்தப்பகுதியைப் பாடலாக எடுத்துரைக்க மங்கை முடிவுசெய்தார். பாடலுக்குரிய பொருளை - தோழர் மீனா சொன்ன செய்திகளின் தொகுப்பை – கவிஞரும் தோழருமான இன்குலாபிடம் சொல்லி அவரை அச்செய்திகளை உள்ளடக்கிய பாடல் ஒன்றைப் புனையச் செய்தோம். அவருக்கேவுரிய கவிநயத்துடன் அவர் இதைச் செய்து கொடுத்தார்.

மதுரையில் நாடகத்தை நாங்கள் மேடையேற்றிய போது, அதை பார்க்க வந்திருந்த மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த தோழர் எஸ்.ஏ.பெருமாள் இடதுசாரி இயக்கம் குறித்துப் போதுமான செய்திகள் இடம் பெறாததைப் பற்றிப் பேசினார். வேண்டுமானால் தான் சில தகவல்களைத் தரத் தயாராக இருப்பதாகவும் கூறினார். நாங்கள் இச்செஉ#திகளை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மணலூர் மணியம்மாவைப் பற்றிய செய்திகளைச் சற்றே விரிவாக மேடையில் பேசவந்தோம். தொடர்ந்து இடதுசாரி இயக்கப் பெண்களைத் தேடியும் சென்றோம். இடதுசாரி இயக்கப் போராட்டங்களைக் குறித்த செய்திகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி மேலும் சில தகவல்களை பெற்று இப்பகுதியை வளப்படுத்தினோம்.
இவ்வாறு உருவான நாடகத்துக்கான ஆதாரச் செய்திகளையும், குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கான அரசியல் விளக்கங்களையும் நான் தொகுத்திருந்தபோதிலும், ஒத்திகையின்போது இவை எங்கள் அனைவருக்கும் சொந்தமான சொற்களாயின, வரலாறாயின. பேசும்போதும் நடிக்கும்போதும் ஒவ்வொருத்தியும் வார்த்தைகளுக்கு உயிரூட்டிய விதமானது பலமுறை படித்தவற்றுக்கு திடீரென புதுப் பொருளை வழங்கியதாக இருந்தது. உயர்கல்லூரி வகுப்பறைகளிலும் ஆய்வேடுகளிலும் புத்தகங்களிலும் மட்டுமே பேசப்பட்ட வரலாற்று ரீதியான பெண்ணிய விவாதங்களைப் பொது வெளியில் வைத்து, சீராகச் செறிவாக ஆராய முடியும் என்ற நம்பிக்கையைக் காலக் கனவு அரங்கேறிய நாடக வெளி ஏற்படுத்திக் கொடுத்தது. இதைச் சாதித்தது மங்கையின் நெறியாள்கைதான்.

சமகாலப் பெண்விடுதலையாளர்களின் பார்வையினூடாக அவர்களுடைய முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களை அறிமுகப்படுத்திய உத்தியானது இரண்டு முக்கியமான விஷயங்களைச் சாதித்தது. வரலாற்றுக்கும் நினைவுக்கும் உள்ள உறவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், பொது நினைவில் நிலைக்காமல் போய்விட்ட, இடம் மறுக்கப்பட்ட பெண்களை நினைவுகொள்ளுதல் என்பது தற்செயலாக நடைபெறுவதல்ல, பெண்ணியச் சொல்லாடல்களினூடாகவும் உணர்வுப்பூர்வமாகவும் மேற்கொள்ளப்படும் செயல் என்பதையும் பார்வையளர்களுக்கு உணர்த்தியது. நாடகக்தின் தொடக்கமே இதைத் தெளிவுப்படுத்தியது. பெண்விடுதலை அமைப்பொன்றின் உறுப்பினர்கள் சமகால பிரச்சனைகளைக் குறித்து விவாதிக்கக் கூடியிருந்த கூட்டம்தான் நாடகத்தின் களம். அந்தப் பெண்களின் செயல்பாட்டுக்கு உதவும் வகையிலும், அச்செயல்பாட்டில் தெளிவு ஏற்படவும் வரலாறு துணைக்கழைக்கப்படுகிறது. அந்த வரலாறே காலக் கனவாக மேடையில் விரிகிறது. இவ்வகையில் மங்கை வடிவமைத்த நாடகவெளியானது வரலாற்றை நிகழ்த்திக் காட்டும் வெளியாகவும், வரலாற்றை நினைவு கூர்ந்தவாக்கில் அதனை படிப்பிக்கும் வெளியாகவும் அமைந்தது.

ஒவ்வொரு மேடையேற்றமும் இதை எங்களுக்கு உணர்த்தியது. ஒத்திசைந்த, முரண்பட்ட, மாறுபட்ட, எதிரும்புதிருமான குரல்களினூடாகவும், நிலைப்பாடுகளின் மூலமும் அரங்கேறிய பெண் விடுதலை வரலாற்றைப் பார்வையாளர்கள் வரித்துக் கொண்ட விதம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாடகத்தைக் கண்டவர்களில் கணிசமானவர்கள் பெண்விடுதலைச் செய்திகளைச் சந்தேகத்துடனும் சிரமத்துடனுமே எதிர்கொள்ளப் பழக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களில் பலர் அந்த வழமையான பார்வையை விலக்கி, காட்சிப்படுத்தப்பட்ட வரலாற்றைத் தங்களுக்குரியதாக ஆக்கிக் கொண்டனர். பெரியாரியவாதிகளும், இடதுசாரிகளும் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களைக் குறித்த பதிவாக இந்த முயற்சியை அறிந்தனர். இத்தகைய பெண்கள் தமிழகத்தில் வாழ்ந்ததை எண்ணித் தனிப்பட்டப் பெண்கள் பரவசமடைந்தனர். தங்களுக்கு ஆதர்சமானவர்களை நினைத்துச் சிலர் பெருமூச்செறிந்தனர். பலர் வாய்பேச முடியாமல் உணர்ச்சிவசப்பட்டுப்போய் மௌனமாக இருந்தனர். வரலாறு காட்டிய சாட்சியங்களில் துலங்கிய மெய்மையானது தங்களை வெட்கமுறச்செய்ததாக ஆண்கள் சிலர் கூறினர்.

வரலாறும் சரி, அதைப் பற்றிய நினைவும் சரி, இரண்டுமே நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிக் கொள்பவைதான் என்பதையும், வரலாற்றுக்கும் நினைவுக்கும் உரிமை கொண்டாட, அவற்றுடன் வாதிட, அவற்றின் சாத்தியப்பாடுகளை நிறைவேற்ற, முன்னெடுத்துச் செல்ல, வரலாற்றின், நினைவின் துணைகொண்டு சமுதாய மாற்றத்தைச் சாதிக்க ஆய்வுகள் எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியமானது, அவ்வரலாற்றைப் பொதுவில் கொண்டு சேர்ப்பதும் விவாதிப்பதும், அதை நம் அனைவருக்கும் உரிய பல்முனைப்பட்ட வரலாறாகக் காட்டுவதும் என்பதைக் காலக் கனவு அனுபவம் எங்களுக்கு மிகச் சரியாகவே உணர்த்தியது. குறிப்பாக, பெண்ணுரிமைக்கான வரலாற்றை நாம் பொதுவில் வைத்துப் பேச வேண்டிய தேவையையும், பெண்கள் பிரச்சனையாக மட்டும் அடையாளங்காணப்படும் பிரச்சனை, எந்தவொரு காலக்கட்டத்திலும் அவ்வாறானதாக மட்டும் அறியப்பட்டது கிடையாது, ஒட்டு மொத்தச் சமுதாயக் கட்டமைப்புடன் தொடர்புடையதாகவே அது வெளிப்பட்டது என்பதைக் காலக் கனவின் மூலம் எங்களால் நிறுவ முடிந்தது.

வரலாற்றை, நினைவை தக்கவைத்துக்கொள்ள அவற்றை அவ்வப்போது நிகழ்த்த வேண்டிய தேவையையும், அத்தகைய நிகழ்த்துதல்களை விடுதலை அரசியல் சாதிக்க நினைக்கும் சமுதாய மாற்றத்துக்கான ஒத்திகைகளாக நாம் அறியலாம் என்பதையும் காலக் கனவு நிறுவியது. முடிவாக, காலக் கனவு அனுபவமானது பெண்ணியத் தோழமையின் தேவையையும் அத்தோழமைக்கேவுரிய அந்நியோன்னியத்தையும் எங்களுக்கு உணர்த்தியது. கூட்டுணர்வுடனும், ஜனநாயகமான முறையிலும் சண்டையிட்டுக் கொண்டும் சந்தோஷமாகவும் தொடர்ந்து வேலை செய்ததுடன், அவ்வேலையின் பலனை பிறருடன் பல நிலைகளில் பகிர்ந்து கொள்ளவும் செய்தோம். எங்களது நாடகப் பாடலில் வருவதுபோல பல பெண்களுடன் மனம் நுழைந்து பேசினோம். புதிய தோழமைகளை வரித்துக் கொண்டோம், பழைய தோழமைகளைப் புதுப்பித்துக் கொண்டோம். நமக்குரிய பெண்விடுதலை வரலாற்றைப் பொது நினைவில் ஒரு சின்னஞ்சிறு பகுதியாகவேனும் பதிவு செய்ய முடிந்த நிறைவு எங்கள் மனத்தில் இன்றுமே உள்ளது.

மெய்யுருப் பெற்றக் காலக் கனவு - அ. மங்கை

சங்க காலம் தொட்டு இன்றைய பெண்சிசுக்கொலை/கருக்கொலை வரையான களங்களை அரங்க அளிக்கைகளாக உருவாக்க முனையும்போது காலூன்றி நிற்பது நமது சமகாலத்தில்தான். நமது சமகால அக்கறைகள் நமது கடந்தகாலம் தொடர்பான வாசிப்புகளுக்கான திசைவழியைத் தீர்மானிக்கின்றன. சிக்கல் சிடுக்குகள் இல்லாத காலப் பயணம் சாத்தியமற்ற ஒன்று. வரலாற்றைத் தேடும் முயற்சியை, நமது இருப்பு, அரசியல் நோக்கு முதலிய காரணிகள் வழிநடத்துகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தேசிய விடுதலை, சோஷலிஸப் போரராட்டம், கம்யூனிச இயக்கம், பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றோடு வாழ்ந்த மணலூர் மணியம்மாவின் வாழ்க்கையை அரங்கத்தில் அளிக்க முயன்ற காலம் தொட்டு மனதில் நீறு பூத்த நினைவாகக் கிடந்த ஒன்று, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தை மேடையேற்றும் ஆர்வம். ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர்களான தோழர் கே.பி.ஜானகியம்மாள், என்.எஸ். ருக்மணியம்மாள், ஷாஜாதி, பாப்பா உமாநாத் ஆகியோரது வாழ்க்கையை அவர்கள் வாய்க்கூற்றாகப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது வரலாற்று எழுதியல் தொடர்பான சிக்கல்களும் மேலெழும்பின. தோழர் மைதிலி சிவரராமன் அவர்களது தொழிற்சங்கம், மாதர் சங்கச் செயல்பாடுகளையும் வாசிப்பு, எழுத்து, குழந்தை வளர்ப்பு, உறவினர் மற்றும் இயக்கத்தாருடனான தொடர்பு ஆகியவற்றை நேரில் அறியும் வாய்ப்பு கிடைத்தபோது வரலாற்றில் எவையெவை இடம்பெறுகின்றன/ விடுபடுகின்றன என்ற கேள்விகள் மேலெழும்பின. வழக்கம்போல, சிதறு சிந்தனைகளாகக் கிடந்த இவற்றைப் பகிர்ந்துகொள்ளும் தோழமை வ. கீதாவோடு வாய்த்தபொழுது, எங்கள் கனவுகள் மெய்யுருக் கொள்ளத் தொடங்கின.

மணிமேகலை நாடகம் உருவாக்கம்தொட்டு எனது எல்லா நாடகப்பணிகளுக்கும் உறுதுணையாகவும், உரைகல்லாகவும் இருந்துவந்த கீதா, தொடர்ந்து நம் கால வரலாற்றில் இயங்கிய பெண்களைக் குறித்த அரங்கப்பதிவு செய்யுமாறு நச்சரித்து வந்தார். கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் அவரது வாசிப்பில் சந்திக்கும் பல பெண் குரல்களைப் பகிர்ந்து கொண்டு வந்தார். அவற்றின் பல்வேறுபட்ட தன்மைகளும், கீதாவின் எழுச்சி மிக்க ஆர்வமும் இந்நாடக உருவாக்கத்தில் உந்தித்தள்ளின. அதேசமயம், எடுத்துக்கொள்ளும் பரப்பின் விஸ்தாரமும், அதற்குள் இருந்த இழைபிரிக்கமுடியாத சிக்கல்களும் அச்சுறுத்தின. ஆனாலும், இப்பயணத்தை மேற்கொண்டோம்!

2006 ஜூலை மாதம் முதல் கூட்டம் நடந்தபோது அதில் அரசியல், வரலாறு, பால்மை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட சகதோழிகள் அனைவரையும் அழைத்தோம். கீதா தேர்ந்தெடுத்துத் தந்த பல மேற்கோள்களை, உரக்க வாசித்ததும், அவற்றின் உள்ளடக்கம், சூழல் குறித்து விவாதித்ததும் ஆத்மார்த்தமான பகிர்தலுக்கு வித்திட்டன. இத்தொடக்ககட்ட விவாதத்தில் பங்கேற்ற அருள்மொழி, ஜெயஸ்ரீ நம்பியார், தமிழச்சி, மீனா சுவாமிநாதன், வாசுகி ஜெயபாலன், நந்தமிழ் நங்கை ஆகிய பலர் இதனை மேடையேற்றும்வரை தார்மீக ஆதரவு தந்தனர்.

கடந்த இருபதாண்டுகளாகக் கீதா சேர்த்து வைத்திருந்த பெண்களின் குரல்களைக் காலம், கருத்து, தொனிக்கேற்ப வகைப்படுத்தி இன்றைய சூழலில் நாம் மீட்டெடுக்க வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்தோம். இன்றில் இருந்து நேற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக இதனை மேற்கொள்ள முடிவு செய்தோம். இந்திய, தமிழக வரலாற்றுச் சூழல்,அவற்றில் ஊடாடிய பெண்ணியச் சிந்தனை, செயல்பாடு ஆகியவற்றை முக்கியக் கண்ணிகளாகக் கொண்டு இப்பனுவலைக் கீதா உருவாக்கினார்.

பனுவலை அரங்க நிகழ்வாக ஆக்கிய முறை பற்றிய பகிர்தல் இங்கு இடம்பெற வேண்டியதொன்று. வழக்கமான மேடைநிகழ்வுகளில் உள்ள கதைச்சரடு இல்லை; கதை மாந்தர்கள் இல்லை; கற்பனைக்கு வேலை இல்லை என்பது மட்டுமல்லாது பலத்த கடிவாளமும் உண்டு. பெண்களது மேற்கோள்களை அவர்களது குரலாகக் காட்டுவதைவிட, நமது வாசிப்பாக நிகழ்த்த வேண்டியதாக இருந்தது. சொல்லப்போனால், அறிவுப்புலத்தில் இயங்கும் வாசிப்பு அனுபவத்தை உணர்வறிவுத் தளத்தில் வழங்க வேண்டிய நிகழ்வை இப்பனுவல் கோரியது.

நடிப்புப் பயிற்சியில் வாசிப்புக்கான பங்கைப் புறந்தள்ளி உடல், குரல் பயிற்சிகளை மட்டுமே முன்னிறுத்தும் சூழல் பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கிவருவதைக் காணலாம். தமிழகத்திலோ சொல்லவே வேண்டாம். ரொம்ப யோசித்தால் உடம்பில் வரராது என்று கோட்பாடு பேசுபவர்கள்கூட உண்டு. அதேசமயம், மூளை உழைப்பில் ஈடுபடும் அறிவுப்புல அறிஞர்கள் உடல், குரல் ஆகியவற்றால் புலப்படுத்தப்படும் அறிவை பொருட்படுத்தாத தன்மையும் இருந்து வருகிறது. இவ்விரண்டு துருவங்களையும் இணைக்கக்கூடிய கலைஞர்கள்தான் இதுபோன்ற பனுவலைச் சுமக்க முடியும் என்பது புரிந்தது. அதோடுகூட, இப்பனுவலின் மையப்புள்ளியான பெண்ணியப் பார்வையில் குறைந்தபட்ச நாட்டம் கொண்டவர்களையும் கண்டறியவேண்டி இருந்தது. அதோடு மட்டுமல்லாமல், பெண்ணியமும் பால்மையும் பாஷனுக்காக உதிர்க்கப்படுகிற அங்கீகரிக்கப்பட்ட புரட்சிகர அரசியலாக உருவகிக்கப்பட்ட சூழலில் பெண்ணியத்தில் உள்ள ஈடுபாடு மட்டுமின்றி, செயல்பாட்டுக்களத்தில் நிற்கக்கூடிய அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டியிருந்தது. எனவே, பெண்ணிய அக்கறை, பெண்ணியக் களச்செயல்பாடு, வாசிப்பில் தீவிரம், அறிவுத்தளச் செயல்பாட்டில் உணர்வெழுச்சி மற்றும் உடல், குரல் பயிற்சிகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்தோம். அப்படிக்கிடைத்தவர்கள்தான் ரேவதி, கல்பனா, பொன்னி, கவின்மலர் ஆகிய நால்வரும்! அனைவருக்குமே கலைத்துறையில் இருந்த ஈடுபாடு கூடுதல் பலம் தந்தது. இதில் கல்பனாவும், பொன்னியும் கல்விப்புலம் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நால்வருமே களச்செயல்பாட்டு அனுபவம் கொண்டவர்களாக அமைந்து போயினர். நாடகத்தில் பாதிப்பொறுப்பு இக்கலைஞர்கள் தேர்வினால் எளிமையாயிற்று. இவர்களை ஒத்த இயக்க, அரசியல், அறிவு, கலை ஈடுபாடு இல்லாதவர்களால் இத்தகைய நாடகம் அரங்கத்தில் எடுபடுமா என்ற அய்யம் எனக்குண்டு. பிற நெறியாளர்கள் கையில் இப்பனுவல் எடுக்கும் கோலம்தான் இந்த அய்யத்தைத் தீர்க்க வேண்டும்.

இந்நாடக அளிக்கையில் இடம்பெறும் ஒருங்கிணைப்பாளர் பாத்திரம் ஒருங்கிணைப்பு பணியை நாடகீயமாகச் செய்யும் பணியாகும். கீதாவிற்கும் எனக்கும், எமது தலைமுறைக்கு முந்தைய தலைமுறை சார்ந்த பெண்ணியவாதி ஒருவரை இப்பாத்திரத்தில் காண ஆர்வம் இருந்தது. பெண்ணியம், பெரியாரியம், தொழிற்சங்கச் செயல்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பேரராசிரியர் சரஸ்வதி அவர்களை அணுகினோம். அவரது வேலைப்பளுவின் இடையே சுமார் ஆறுமாத காலம் காலக் கனவு நாடகத்தோடு அவர் பயணித்தார். எமக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக அதைக் கருதுகிறோம். நாடக நிகழ்வுகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடன் அவரது வேலைப்பளுவைக் கணக்கில் கொண்டு கீதா அவரது பாத்திரத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

அரங்க அளிக்கையில் நடிகர்களை அடுத்து முக்கியப் பங்கேற்பது அரங்க வெளி. படச்சட்ட மேடையின் நடிகர்-பார்வையாளர் வெளிகளின் பிரிவினை இப்பனுவலின் பரப்பிற்குள்ளேயே வரவில்லை. பார்வையாளரைச் சமதளத்தில் அணுகும் வட்ட அரங்கிலும் நடிகர்-பார்வையாளர் எல்லைகள் பெருமளவு வரையறுக்கப்பட்டவையே. இந்த வரையறைகளை எவ்வளவுக்கெவ்வளவு மீறமுடியுமோ அவ்வளவு தூரம் மீறுவதற்கான முயற்சியில் உதித்ததுதான் காலக் கனவின் அரங்கவெளி. பார்வையாளர்களோடு சமதளத்தில் அவர்களுக்கருகேயே அமர்ந்து இருக்கும் நடிகர்கள் தமது இருப்பை நிலைநிறுத்துவது இம்மேடையேற்றத்தின் பெரும் சவால். ஆனால், அதன்மூலம் மட்டுமே பெண்ணியச் சிந்தனைகளைப் படிநிலை தன்மைகளைத் தகர்த்து, நேரடியாகவும், நெருக்கமாகவும் அளிக்க முடிந்தது. நடிகர்களின் இயக்கத்துக்கு உதவியாக வெளியை மூன்று திசைகளில் ஊடறுத்துச் செஉல்லும் நடைபாதைகள் மேடைப்பொருளாயின. இத்தகைய அரங்கத் தேர்வு காரணமாகப் பார்வையாளர்களுடன் கிடைத்த அனுபவம் விரிவாகப் பேசவேண்டிய ஒன்று.
நாடகப் பனுவலை அரங்கத்தில் அளிக்கும்போது அதன் மொழியியல்சார் குறியீட்டுத் தளத்தில் இருந்து மாத்திரம் புரிந்துகொள்ள முடியாது.உடல் மொழி (Gestic Language) எனப்படும் உடலசைவு, குரல், தொனி, லயம், கதி ஆகியவை சொற்களுக்கு வெவ்வேறு பொருளை வழங்கும். பொதுவாகப் பாத்திரத்திற்கேற்ப இவற்றை உருவகித்து உணர்வுத்தளப் பகிர்வாகச் சொற்களை வெளிப்படுத்துதல் தொழிற்படும். ஆனால், இப்பனுவலில் பாத்திரங்கள் நிஜவாழ்வில் இருந்த மனிதர்கள். அவர்களது முழுச்சூழலும் பனுவலின் பரப்பில் வரவில்லை. பிரபலமான பெயர்களான டாக்டர் முத்துலட்சுமி, கே.பி. சுந்தரராம்பாள், குஞ்சிதம் குருசாமி போன்றவர்களின் காட்சிப் படிமங்கள் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதோடு அவர்களது மேற்கோள்கள் மாத்திரமே பனுவல் நமக்குத் தரும் வெளி. இந்தச் சூழலில் பழகிப்போன பாத்திரவார்ப்பு கவைக்குதவாமல் போனது. அம்முறை தேவையும்படவில்லை.

நடிகர்கள், தங்களது இடம், வெளி, சூழலில் இருந்து குறிப்பிட்ட பெண்களது சொற்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதையே மேடையில் வழங்கினோம். எந்தவிதமான சித்திரிப்பு (Representation) முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சித்திரிப்புகள் தேவையில்லை என்றானதும், நடிகர்களுக்கான உடை, ஒப்பனை மிகமிக எளிதானது. அவர்கள் இயல்பான, அன்றாட உடையில் இவ்வரலாற்றுப் பெண்களோடு உறவாட முடிந்தது. நால்வரும் வெவ்வேறு வகை உடைகளில் பங்கேற்றனர். நால்வருமே சேலையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்தது முழுக்க முழுக்க வசதி தொடர்பான விஷயமாயிற்று. தமிழ் மொழி நாடகத்தில், தமிழ்ப் பண்பாட்டு உருவகமான சேலை இடம்பெறாமலேயே, தமிழ்ப் பெண்களின் வரலாற்றைப் பேசியது முக்கியமாகப் படுறது. சித்திரிப்பின் அரசியல் குறித்த பெண்ணியரீதியான கேள்விகளை இது கிளப்புகிறது. தமிழ்ப் பெண்ணின் பண்பாடு சேலையிலும், தலைமுடிப் பின்னலிலும் இல்லை என்பதைச் செஉரால்லியது. அதே சமயம், மணியம்மா வேட்டி அணிந்ததையும், பதவிசாக போர்த்தியபடி பேசிய ஆண்டாள் அம்மாளையும், கணீர் குரலில் பாடிய கே.பி.எஸ்ஸையும் குறித்த நமது மனப்படிமங்களை நினைவுறுத்தியது.

சித்திரிப்பின் அரசியல் குறித்து காலக் கனவு அரங்காக்கம் கிளப்பும் மற்றொரு கேள்வி அ. மாதவையாவின் சத்தியானந்தம் நாவலில் வரும் கிறித்தவப் பெண் உபதேசிகள் குறித்த பகுதியில் வெளிப்படுத்தப்பட்டது. அவ்வர்ணனை உருவாக்கும் படிமத்தை வாசிக்கும் பெண்ணியவாதியின் எள்ளலை மேடையாக்க முயன்றோம். இந்த உபதேசிப் பெண்களின் மடிப்புக்கலையாத சேலை, அலுங்காத நடை, இளமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கண்டு மிரளும் ஆணியச் சிந்தனையை, அப்பெண்களின் பால் இனப் பகுப்பைச் சற்றே மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம் மாதவையா உருவாக்கிய ஆண் பாத்திரத்தின் நனவிலி மனதின் பெண்விடுதலை மறுப்புணர்வைக் கோடி காட்டமுடிந்தது.

அதேசமயம், கே.பி.எஸ்ஸின் மேடை வாழ்வு, மற்றும் மணியம்மாவின் மரபு மீறிய செயல்பாடுகளை நடிப்பிட மையத்தில் குழுவாக உறை பிம்பங்களாகக் காட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சித்திரிப்பில் தொழிற்படும் மரபுத்தன்மைகளை விமரிசனப்பூர்வமாக அணுகும் முயற்சியாக இதனைக் கொள்ளலாம்.

அரங்கத் தளத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்பவர்களாக,பார்வையாளர் வெளியை உருவாக்கியதன் மூலம் பார்வையாளர்களை நடிப்பிடவாசிகளாகக் காலக் கனவு வடிவமைத்தது. பார்வையாளர்களையும் உள்ளடக்கியே பனுவலின் கூற்று அமைந்தது. பெண்ணிய வரலாற்றைக் கட்டமைக்கும் பணியில் பங்காளிகளாகப் பார்வையாளர்களை இணைத்தது. அதனால், இடம்பெறும் மேற்கோள்களில் சிலவற்றைப் பார்வையாளர்கள் வழங்கினர். அவர்களில் சிலர் நின்று படித்தனர். சிலர் இருந்த இடத்தில் இருந்தே வாசித்தனர். சிலரது குரல் கேட்காதபோது வேறு பார்வையாளர்கள் உரக்க வாசிக்கச் சொன்னார்கள். சில இடங்களில், அதன் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் தமது கருத்தை/தாம் வாசித்ததைப் பகிர்ந்து கொண்டனர். சிந்தனை, அறிவு, வாசிப்பு வட்டத்திற்குள் பங்கேற்கும் சகபயணிகளாகப் பார்வையாளர்களைக் காலக் கனவு அணுகியது. சில நிகழ்வுகளில் சிந்தனைப் பகிர்தல் மட்டுமின்றி, நினைவுப் பகிர்தலும் நிகழ்ந்தது. மதுரையில் நடந்த நிகழ்வில் நாடக மேடைகளில் பங்கேற்ற வயோதிகப் பெண்மணியின் நினைவுத் தடத்தில் கே.பி.எஸ் பற்றிய குறிப்பு அவரது பாடலை வழங்க உந்தியது. சேலத்தில் பெரியார் இயக்கத் தோழர்கள் வெவ்வேறு பெரியார் மேற்கோள்களைப் பகிர்ந்து கொண்டனர். திருச்சியில் ஒருபுறம் கிறித்துவ கன்னியாஸ்திரிகளும் மறுபுறம் பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்களும் அமர்ந்திருந்த காட்சி இன்றும் மனதில் நிற்கிறது. மதுரை கூடு ஏற்படுத்தியிருந்த நிகழ்வில் கிறித்துவச் சகோதரிகள் கிறித்துவ மதபோதகப் பணி குறித்த பாடல் முடிந்ததும் சிலுவைக் குறியிட்டுக் கொண்டனர். கல்லூரிகளில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தில் சிலர் இன்றும் கல்விக்காக நடத்தும் போரராட்டம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.

காலக் கனவு நாடக முதல் மேடையேற்றம் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் 2007 அக்டோபர் 13ஆம் நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கியது. பெண்களைப் பார்வையாளர்களாக எதிர்நோக்கும் அரங்க நிகழ்வு என்பதால், மாலை நேரப் பொழுதுபோக்கு நேரமாக நிலைநிறுத்தப்பட்ட 7 மணி நிகழ்வுகள் கூடியவரை தவிர்க்கப்பட்டன. பெண்ணிய அரங்க நிகழ்வின் முக்கிய எடுகோளாக பெண் பார்வையாளர்களின் பார்வையையும், வெளியையும் அனுமதிப்பது என்பார் எலின் டயமண்ட் (Elin Diamond). ஆனால், பெண்களைப் பெண்களாகப் பார்ப்பதற்குப் பழக்கப்பட வேண்டும் என்று குறிப்படுவார். அதற்கான முயற்சியாகத்தான் அரங்க நிகழ்வின் நேரம், பார்வையாளர்களின் இடம், அரங்க வெளி ஆகியவற்றை காலக் கனவு நிகழ்வு மேற்கொண்டது.

ஒரு புத்தகத்திற்குள் அடங்காத விஷயங்களை, ஒரு ஆய்வு நூலாக எழுதப்பட வேண்டிய ஒன்றை அரங்கமாக வழங்கும் பேதமை குறித்து என்ன சொல்வது? இந்தப் பைத்தியத்தமான முயற்சியில் வெறியோடு ஈடுபட்ட எங்கள் அனைவருக்கும் எதார்த்தமும் தெரிந்தே இருந்தது. கல்லூரி மாணவியர், பெண்கள் அமைப்புகள், பெரியாரிய பொதுவுடமை அமைப்புகள் தவிர வேறு யாரையும் இந்நிகழ்வு எட்டப் போவதில்லை என்ற புரிதலோடு மூன்று, நான்கு மேடையேற்றங்களை மட்டுமே எதிர்ப்பார்த்த எங்களுக்கு சரியாக ஓராண்டு காலத்திற்குள் பதினைந்து அழைப்புகள் கிடைத்தன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒளிப்படங்கள் மூலம் சுமார் 300 பேர் பார்த்தது பெரும் அனுபவம்.

எந்தவகையிலும் பொழுதுபோக்கு வகையைச் சேரராத அரங்க நிகழ்வு என்பதாலும், நிதி ஆதார இன்மையாலும் முறையான அழைப்பிதழ், சுவரொட்டி எவையும் இல்லாமலே இந்நிகழ்வு அரங்கேறியது. வண்ண நகலெடுக்கப்பட்ட 25 சுவரொட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நாடக முடிவில் இருந்த தேவையைப் பூர்த்தி செய்ய IWID உதவியோடு 1000 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டன.

காலக் கனவு பயணத்தின் பங்கேற்பாளர்களாக பார்வையாளர்களைக் கருதியதால், அவர்களது எதிர்வினைகளை அரங்க நிகழ்வின் இறுதியில் பதிவு செய்யுறுமவண்ணப் பேனாக்களால் எழுதப்பட்ட கருத்துக்கள் அத்தனையும் துறைமுகத் தொழிலாளர்களுக்காக நிகழ்த்தப்பட்ட 10-வது அளிக்கையின்போது நாற்புறமும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

எண்பதுகளில் இருந்து தமிழகப் பெண்கள் இயக்கங்கள், அமைப்புகளோடு இயங்கி வரும் கீதாவுக்கும் எனக்கும் இந்நாடக ஆக்கம் மீண்டும் புத்துயிர்ப்பு ஊட்டியது. இந்நாடகம் உருவாக்கிய சிந்தனைகளை அடியொற்றி பெண்ணிய விவாதங்களுக்கான ஒரு மேடையாகப் பெண்கள் சந்திப்பு உருவானது. சிறு குழுவானாலும் தொடர்ந்து சந்திக்கவும், சமகால விஷயங்களை விவாதிக்கவும் இது களம் அமைத்திருக்கிறது. இவ்வமைப்பின் மூலம் ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு எதிரராக நடந்த கொடுமைகளைக் கண்டித்து ஒரு கூட்டமும், நேபாளத்தில் உருவாகியுள்ள மாவோயிஸ ஆட்சியின் அரசியல் அமைப்பு வரைவு முயற்சிகள் குறித்த கூட்டமும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஈழத்தில் மக்கள் நலன்களுக்கான அவசர தேவையை வலியுறுத்தி கேட்டிருப்பாய் காற்றே என்ற சிறுநூலும் வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 13, 2007இல் இராணிமேரிக் கல்லூரியில் நடந்த காலக் கனவு நிகழ்வு அரங்க அளிக்கையாகக் காண்பதைவிட இருபத்தைந்தாண்டு பெண்கள் இயக்கத்தின் தோழமைப் பகிர்வாகக் கருதாலாம். பல்வேறு அமைப்புகளில், பல்வேறு துறைகளில், பல்வேறு ஈடுபாடுகளுடன் இயங்கும் அனைவரும் அன்று வந்து சேர்ந்தனர். பலருக்கும் அழைப்பு நேரடியாகக் கிடைக்காதபோதும் வந்து சேர்ந்தனர். சுமார் 150 பேரை எதிர்பார்த்துப் போடப்பட்டிருந்த இருக்கைகள் போதாமல் அந்த அறைக்குள் இருந்த மேடை, கதவுகள் அருகே இருந்த இடைவெளி அனைத்தும் நிரம்பி வழிந்தன. அறைக்குள் நுழையமுடியாமல் வெளியே நின்றவர்கள்கூட காதில் விழும் சொற்களுக்காய்க் காத்து நின்றனர். இவர்கள் தமிழகப் பெண்கள் இயக்கத்தின் பங்காளிகள்; தமது முன்னோடிகளைக் கௌரவிக்க வந்த சந்ததியினர். சுமார் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் அன்று ஒன்றாக இருந்தனர். பெண்கள் இயக்கத்தில் அக்கறை கொண்ட ஆண் தோழர்களும், சகபோரராளிகளான அரவாணித் தோழர்களும் இருந்தனர். வரலாற்றுத்தேடலையும், விமரிசனப் பார்வையையும், ஆழமான நட்பையும், மனம் நிறைந்த தோழமையையும் உறுதிப்படுத்திய அந்நாள் நம்பிக்கை ஊட்டியது, கனவு மெய்ப்படும் கணமாய் விரிந்தது.