Wednesday, April 7, 2010

மெய்யுருப் பெற்றக் காலக் கனவு - அ. மங்கை

சங்க காலம் தொட்டு இன்றைய பெண்சிசுக்கொலை/கருக்கொலை வரையான களங்களை அரங்க அளிக்கைகளாக உருவாக்க முனையும்போது காலூன்றி நிற்பது நமது சமகாலத்தில்தான். நமது சமகால அக்கறைகள் நமது கடந்தகாலம் தொடர்பான வாசிப்புகளுக்கான திசைவழியைத் தீர்மானிக்கின்றன. சிக்கல் சிடுக்குகள் இல்லாத காலப் பயணம் சாத்தியமற்ற ஒன்று. வரலாற்றைத் தேடும் முயற்சியை, நமது இருப்பு, அரசியல் நோக்கு முதலிய காரணிகள் வழிநடத்துகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தேசிய விடுதலை, சோஷலிஸப் போரராட்டம், கம்யூனிச இயக்கம், பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றோடு வாழ்ந்த மணலூர் மணியம்மாவின் வாழ்க்கையை அரங்கத்தில் அளிக்க முயன்ற காலம் தொட்டு மனதில் நீறு பூத்த நினைவாகக் கிடந்த ஒன்று, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தை மேடையேற்றும் ஆர்வம். ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர்களான தோழர் கே.பி.ஜானகியம்மாள், என்.எஸ். ருக்மணியம்மாள், ஷாஜாதி, பாப்பா உமாநாத் ஆகியோரது வாழ்க்கையை அவர்கள் வாய்க்கூற்றாகப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது வரலாற்று எழுதியல் தொடர்பான சிக்கல்களும் மேலெழும்பின. தோழர் மைதிலி சிவரராமன் அவர்களது தொழிற்சங்கம், மாதர் சங்கச் செயல்பாடுகளையும் வாசிப்பு, எழுத்து, குழந்தை வளர்ப்பு, உறவினர் மற்றும் இயக்கத்தாருடனான தொடர்பு ஆகியவற்றை நேரில் அறியும் வாய்ப்பு கிடைத்தபோது வரலாற்றில் எவையெவை இடம்பெறுகின்றன/ விடுபடுகின்றன என்ற கேள்விகள் மேலெழும்பின. வழக்கம்போல, சிதறு சிந்தனைகளாகக் கிடந்த இவற்றைப் பகிர்ந்துகொள்ளும் தோழமை வ. கீதாவோடு வாய்த்தபொழுது, எங்கள் கனவுகள் மெய்யுருக் கொள்ளத் தொடங்கின.

மணிமேகலை நாடகம் உருவாக்கம்தொட்டு எனது எல்லா நாடகப்பணிகளுக்கும் உறுதுணையாகவும், உரைகல்லாகவும் இருந்துவந்த கீதா, தொடர்ந்து நம் கால வரலாற்றில் இயங்கிய பெண்களைக் குறித்த அரங்கப்பதிவு செய்யுமாறு நச்சரித்து வந்தார். கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் அவரது வாசிப்பில் சந்திக்கும் பல பெண் குரல்களைப் பகிர்ந்து கொண்டு வந்தார். அவற்றின் பல்வேறுபட்ட தன்மைகளும், கீதாவின் எழுச்சி மிக்க ஆர்வமும் இந்நாடக உருவாக்கத்தில் உந்தித்தள்ளின. அதேசமயம், எடுத்துக்கொள்ளும் பரப்பின் விஸ்தாரமும், அதற்குள் இருந்த இழைபிரிக்கமுடியாத சிக்கல்களும் அச்சுறுத்தின. ஆனாலும், இப்பயணத்தை மேற்கொண்டோம்!

2006 ஜூலை மாதம் முதல் கூட்டம் நடந்தபோது அதில் அரசியல், வரலாறு, பால்மை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட சகதோழிகள் அனைவரையும் அழைத்தோம். கீதா தேர்ந்தெடுத்துத் தந்த பல மேற்கோள்களை, உரக்க வாசித்ததும், அவற்றின் உள்ளடக்கம், சூழல் குறித்து விவாதித்ததும் ஆத்மார்த்தமான பகிர்தலுக்கு வித்திட்டன. இத்தொடக்ககட்ட விவாதத்தில் பங்கேற்ற அருள்மொழி, ஜெயஸ்ரீ நம்பியார், தமிழச்சி, மீனா சுவாமிநாதன், வாசுகி ஜெயபாலன், நந்தமிழ் நங்கை ஆகிய பலர் இதனை மேடையேற்றும்வரை தார்மீக ஆதரவு தந்தனர்.

கடந்த இருபதாண்டுகளாகக் கீதா சேர்த்து வைத்திருந்த பெண்களின் குரல்களைக் காலம், கருத்து, தொனிக்கேற்ப வகைப்படுத்தி இன்றைய சூழலில் நாம் மீட்டெடுக்க வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்தோம். இன்றில் இருந்து நேற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக இதனை மேற்கொள்ள முடிவு செய்தோம். இந்திய, தமிழக வரலாற்றுச் சூழல்,அவற்றில் ஊடாடிய பெண்ணியச் சிந்தனை, செயல்பாடு ஆகியவற்றை முக்கியக் கண்ணிகளாகக் கொண்டு இப்பனுவலைக் கீதா உருவாக்கினார்.

பனுவலை அரங்க நிகழ்வாக ஆக்கிய முறை பற்றிய பகிர்தல் இங்கு இடம்பெற வேண்டியதொன்று. வழக்கமான மேடைநிகழ்வுகளில் உள்ள கதைச்சரடு இல்லை; கதை மாந்தர்கள் இல்லை; கற்பனைக்கு வேலை இல்லை என்பது மட்டுமல்லாது பலத்த கடிவாளமும் உண்டு. பெண்களது மேற்கோள்களை அவர்களது குரலாகக் காட்டுவதைவிட, நமது வாசிப்பாக நிகழ்த்த வேண்டியதாக இருந்தது. சொல்லப்போனால், அறிவுப்புலத்தில் இயங்கும் வாசிப்பு அனுபவத்தை உணர்வறிவுத் தளத்தில் வழங்க வேண்டிய நிகழ்வை இப்பனுவல் கோரியது.

நடிப்புப் பயிற்சியில் வாசிப்புக்கான பங்கைப் புறந்தள்ளி உடல், குரல் பயிற்சிகளை மட்டுமே முன்னிறுத்தும் சூழல் பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கிவருவதைக் காணலாம். தமிழகத்திலோ சொல்லவே வேண்டாம். ரொம்ப யோசித்தால் உடம்பில் வரராது என்று கோட்பாடு பேசுபவர்கள்கூட உண்டு. அதேசமயம், மூளை உழைப்பில் ஈடுபடும் அறிவுப்புல அறிஞர்கள் உடல், குரல் ஆகியவற்றால் புலப்படுத்தப்படும் அறிவை பொருட்படுத்தாத தன்மையும் இருந்து வருகிறது. இவ்விரண்டு துருவங்களையும் இணைக்கக்கூடிய கலைஞர்கள்தான் இதுபோன்ற பனுவலைச் சுமக்க முடியும் என்பது புரிந்தது. அதோடுகூட, இப்பனுவலின் மையப்புள்ளியான பெண்ணியப் பார்வையில் குறைந்தபட்ச நாட்டம் கொண்டவர்களையும் கண்டறியவேண்டி இருந்தது. அதோடு மட்டுமல்லாமல், பெண்ணியமும் பால்மையும் பாஷனுக்காக உதிர்க்கப்படுகிற அங்கீகரிக்கப்பட்ட புரட்சிகர அரசியலாக உருவகிக்கப்பட்ட சூழலில் பெண்ணியத்தில் உள்ள ஈடுபாடு மட்டுமின்றி, செயல்பாட்டுக்களத்தில் நிற்கக்கூடிய அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டியிருந்தது. எனவே, பெண்ணிய அக்கறை, பெண்ணியக் களச்செயல்பாடு, வாசிப்பில் தீவிரம், அறிவுத்தளச் செயல்பாட்டில் உணர்வெழுச்சி மற்றும் உடல், குரல் பயிற்சிகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்தோம். அப்படிக்கிடைத்தவர்கள்தான் ரேவதி, கல்பனா, பொன்னி, கவின்மலர் ஆகிய நால்வரும்! அனைவருக்குமே கலைத்துறையில் இருந்த ஈடுபாடு கூடுதல் பலம் தந்தது. இதில் கல்பனாவும், பொன்னியும் கல்விப்புலம் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நால்வருமே களச்செயல்பாட்டு அனுபவம் கொண்டவர்களாக அமைந்து போயினர். நாடகத்தில் பாதிப்பொறுப்பு இக்கலைஞர்கள் தேர்வினால் எளிமையாயிற்று. இவர்களை ஒத்த இயக்க, அரசியல், அறிவு, கலை ஈடுபாடு இல்லாதவர்களால் இத்தகைய நாடகம் அரங்கத்தில் எடுபடுமா என்ற அய்யம் எனக்குண்டு. பிற நெறியாளர்கள் கையில் இப்பனுவல் எடுக்கும் கோலம்தான் இந்த அய்யத்தைத் தீர்க்க வேண்டும்.

இந்நாடக அளிக்கையில் இடம்பெறும் ஒருங்கிணைப்பாளர் பாத்திரம் ஒருங்கிணைப்பு பணியை நாடகீயமாகச் செய்யும் பணியாகும். கீதாவிற்கும் எனக்கும், எமது தலைமுறைக்கு முந்தைய தலைமுறை சார்ந்த பெண்ணியவாதி ஒருவரை இப்பாத்திரத்தில் காண ஆர்வம் இருந்தது. பெண்ணியம், பெரியாரியம், தொழிற்சங்கச் செயல்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பேரராசிரியர் சரஸ்வதி அவர்களை அணுகினோம். அவரது வேலைப்பளுவின் இடையே சுமார் ஆறுமாத காலம் காலக் கனவு நாடகத்தோடு அவர் பயணித்தார். எமக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக அதைக் கருதுகிறோம். நாடக நிகழ்வுகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடன் அவரது வேலைப்பளுவைக் கணக்கில் கொண்டு கீதா அவரது பாத்திரத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

அரங்க அளிக்கையில் நடிகர்களை அடுத்து முக்கியப் பங்கேற்பது அரங்க வெளி. படச்சட்ட மேடையின் நடிகர்-பார்வையாளர் வெளிகளின் பிரிவினை இப்பனுவலின் பரப்பிற்குள்ளேயே வரவில்லை. பார்வையாளரைச் சமதளத்தில் அணுகும் வட்ட அரங்கிலும் நடிகர்-பார்வையாளர் எல்லைகள் பெருமளவு வரையறுக்கப்பட்டவையே. இந்த வரையறைகளை எவ்வளவுக்கெவ்வளவு மீறமுடியுமோ அவ்வளவு தூரம் மீறுவதற்கான முயற்சியில் உதித்ததுதான் காலக் கனவின் அரங்கவெளி. பார்வையாளர்களோடு சமதளத்தில் அவர்களுக்கருகேயே அமர்ந்து இருக்கும் நடிகர்கள் தமது இருப்பை நிலைநிறுத்துவது இம்மேடையேற்றத்தின் பெரும் சவால். ஆனால், அதன்மூலம் மட்டுமே பெண்ணியச் சிந்தனைகளைப் படிநிலை தன்மைகளைத் தகர்த்து, நேரடியாகவும், நெருக்கமாகவும் அளிக்க முடிந்தது. நடிகர்களின் இயக்கத்துக்கு உதவியாக வெளியை மூன்று திசைகளில் ஊடறுத்துச் செஉல்லும் நடைபாதைகள் மேடைப்பொருளாயின. இத்தகைய அரங்கத் தேர்வு காரணமாகப் பார்வையாளர்களுடன் கிடைத்த அனுபவம் விரிவாகப் பேசவேண்டிய ஒன்று.
நாடகப் பனுவலை அரங்கத்தில் அளிக்கும்போது அதன் மொழியியல்சார் குறியீட்டுத் தளத்தில் இருந்து மாத்திரம் புரிந்துகொள்ள முடியாது.உடல் மொழி (Gestic Language) எனப்படும் உடலசைவு, குரல், தொனி, லயம், கதி ஆகியவை சொற்களுக்கு வெவ்வேறு பொருளை வழங்கும். பொதுவாகப் பாத்திரத்திற்கேற்ப இவற்றை உருவகித்து உணர்வுத்தளப் பகிர்வாகச் சொற்களை வெளிப்படுத்துதல் தொழிற்படும். ஆனால், இப்பனுவலில் பாத்திரங்கள் நிஜவாழ்வில் இருந்த மனிதர்கள். அவர்களது முழுச்சூழலும் பனுவலின் பரப்பில் வரவில்லை. பிரபலமான பெயர்களான டாக்டர் முத்துலட்சுமி, கே.பி. சுந்தரராம்பாள், குஞ்சிதம் குருசாமி போன்றவர்களின் காட்சிப் படிமங்கள் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதோடு அவர்களது மேற்கோள்கள் மாத்திரமே பனுவல் நமக்குத் தரும் வெளி. இந்தச் சூழலில் பழகிப்போன பாத்திரவார்ப்பு கவைக்குதவாமல் போனது. அம்முறை தேவையும்படவில்லை.

நடிகர்கள், தங்களது இடம், வெளி, சூழலில் இருந்து குறிப்பிட்ட பெண்களது சொற்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதையே மேடையில் வழங்கினோம். எந்தவிதமான சித்திரிப்பு (Representation) முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சித்திரிப்புகள் தேவையில்லை என்றானதும், நடிகர்களுக்கான உடை, ஒப்பனை மிகமிக எளிதானது. அவர்கள் இயல்பான, அன்றாட உடையில் இவ்வரலாற்றுப் பெண்களோடு உறவாட முடிந்தது. நால்வரும் வெவ்வேறு வகை உடைகளில் பங்கேற்றனர். நால்வருமே சேலையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்தது முழுக்க முழுக்க வசதி தொடர்பான விஷயமாயிற்று. தமிழ் மொழி நாடகத்தில், தமிழ்ப் பண்பாட்டு உருவகமான சேலை இடம்பெறாமலேயே, தமிழ்ப் பெண்களின் வரலாற்றைப் பேசியது முக்கியமாகப் படுறது. சித்திரிப்பின் அரசியல் குறித்த பெண்ணியரீதியான கேள்விகளை இது கிளப்புகிறது. தமிழ்ப் பெண்ணின் பண்பாடு சேலையிலும், தலைமுடிப் பின்னலிலும் இல்லை என்பதைச் செஉரால்லியது. அதே சமயம், மணியம்மா வேட்டி அணிந்ததையும், பதவிசாக போர்த்தியபடி பேசிய ஆண்டாள் அம்மாளையும், கணீர் குரலில் பாடிய கே.பி.எஸ்ஸையும் குறித்த நமது மனப்படிமங்களை நினைவுறுத்தியது.

சித்திரிப்பின் அரசியல் குறித்து காலக் கனவு அரங்காக்கம் கிளப்பும் மற்றொரு கேள்வி அ. மாதவையாவின் சத்தியானந்தம் நாவலில் வரும் கிறித்தவப் பெண் உபதேசிகள் குறித்த பகுதியில் வெளிப்படுத்தப்பட்டது. அவ்வர்ணனை உருவாக்கும் படிமத்தை வாசிக்கும் பெண்ணியவாதியின் எள்ளலை மேடையாக்க முயன்றோம். இந்த உபதேசிப் பெண்களின் மடிப்புக்கலையாத சேலை, அலுங்காத நடை, இளமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கண்டு மிரளும் ஆணியச் சிந்தனையை, அப்பெண்களின் பால் இனப் பகுப்பைச் சற்றே மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம் மாதவையா உருவாக்கிய ஆண் பாத்திரத்தின் நனவிலி மனதின் பெண்விடுதலை மறுப்புணர்வைக் கோடி காட்டமுடிந்தது.

அதேசமயம், கே.பி.எஸ்ஸின் மேடை வாழ்வு, மற்றும் மணியம்மாவின் மரபு மீறிய செயல்பாடுகளை நடிப்பிட மையத்தில் குழுவாக உறை பிம்பங்களாகக் காட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சித்திரிப்பில் தொழிற்படும் மரபுத்தன்மைகளை விமரிசனப்பூர்வமாக அணுகும் முயற்சியாக இதனைக் கொள்ளலாம்.

அரங்கத் தளத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்பவர்களாக,பார்வையாளர் வெளியை உருவாக்கியதன் மூலம் பார்வையாளர்களை நடிப்பிடவாசிகளாகக் காலக் கனவு வடிவமைத்தது. பார்வையாளர்களையும் உள்ளடக்கியே பனுவலின் கூற்று அமைந்தது. பெண்ணிய வரலாற்றைக் கட்டமைக்கும் பணியில் பங்காளிகளாகப் பார்வையாளர்களை இணைத்தது. அதனால், இடம்பெறும் மேற்கோள்களில் சிலவற்றைப் பார்வையாளர்கள் வழங்கினர். அவர்களில் சிலர் நின்று படித்தனர். சிலர் இருந்த இடத்தில் இருந்தே வாசித்தனர். சிலரது குரல் கேட்காதபோது வேறு பார்வையாளர்கள் உரக்க வாசிக்கச் சொன்னார்கள். சில இடங்களில், அதன் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் தமது கருத்தை/தாம் வாசித்ததைப் பகிர்ந்து கொண்டனர். சிந்தனை, அறிவு, வாசிப்பு வட்டத்திற்குள் பங்கேற்கும் சகபயணிகளாகப் பார்வையாளர்களைக் காலக் கனவு அணுகியது. சில நிகழ்வுகளில் சிந்தனைப் பகிர்தல் மட்டுமின்றி, நினைவுப் பகிர்தலும் நிகழ்ந்தது. மதுரையில் நடந்த நிகழ்வில் நாடக மேடைகளில் பங்கேற்ற வயோதிகப் பெண்மணியின் நினைவுத் தடத்தில் கே.பி.எஸ் பற்றிய குறிப்பு அவரது பாடலை வழங்க உந்தியது. சேலத்தில் பெரியார் இயக்கத் தோழர்கள் வெவ்வேறு பெரியார் மேற்கோள்களைப் பகிர்ந்து கொண்டனர். திருச்சியில் ஒருபுறம் கிறித்துவ கன்னியாஸ்திரிகளும் மறுபுறம் பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்களும் அமர்ந்திருந்த காட்சி இன்றும் மனதில் நிற்கிறது. மதுரை கூடு ஏற்படுத்தியிருந்த நிகழ்வில் கிறித்துவச் சகோதரிகள் கிறித்துவ மதபோதகப் பணி குறித்த பாடல் முடிந்ததும் சிலுவைக் குறியிட்டுக் கொண்டனர். கல்லூரிகளில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தில் சிலர் இன்றும் கல்விக்காக நடத்தும் போரராட்டம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.

காலக் கனவு நாடக முதல் மேடையேற்றம் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் 2007 அக்டோபர் 13ஆம் நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கியது. பெண்களைப் பார்வையாளர்களாக எதிர்நோக்கும் அரங்க நிகழ்வு என்பதால், மாலை நேரப் பொழுதுபோக்கு நேரமாக நிலைநிறுத்தப்பட்ட 7 மணி நிகழ்வுகள் கூடியவரை தவிர்க்கப்பட்டன. பெண்ணிய அரங்க நிகழ்வின் முக்கிய எடுகோளாக பெண் பார்வையாளர்களின் பார்வையையும், வெளியையும் அனுமதிப்பது என்பார் எலின் டயமண்ட் (Elin Diamond). ஆனால், பெண்களைப் பெண்களாகப் பார்ப்பதற்குப் பழக்கப்பட வேண்டும் என்று குறிப்படுவார். அதற்கான முயற்சியாகத்தான் அரங்க நிகழ்வின் நேரம், பார்வையாளர்களின் இடம், அரங்க வெளி ஆகியவற்றை காலக் கனவு நிகழ்வு மேற்கொண்டது.

ஒரு புத்தகத்திற்குள் அடங்காத விஷயங்களை, ஒரு ஆய்வு நூலாக எழுதப்பட வேண்டிய ஒன்றை அரங்கமாக வழங்கும் பேதமை குறித்து என்ன சொல்வது? இந்தப் பைத்தியத்தமான முயற்சியில் வெறியோடு ஈடுபட்ட எங்கள் அனைவருக்கும் எதார்த்தமும் தெரிந்தே இருந்தது. கல்லூரி மாணவியர், பெண்கள் அமைப்புகள், பெரியாரிய பொதுவுடமை அமைப்புகள் தவிர வேறு யாரையும் இந்நிகழ்வு எட்டப் போவதில்லை என்ற புரிதலோடு மூன்று, நான்கு மேடையேற்றங்களை மட்டுமே எதிர்ப்பார்த்த எங்களுக்கு சரியாக ஓராண்டு காலத்திற்குள் பதினைந்து அழைப்புகள் கிடைத்தன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒளிப்படங்கள் மூலம் சுமார் 300 பேர் பார்த்தது பெரும் அனுபவம்.

எந்தவகையிலும் பொழுதுபோக்கு வகையைச் சேரராத அரங்க நிகழ்வு என்பதாலும், நிதி ஆதார இன்மையாலும் முறையான அழைப்பிதழ், சுவரொட்டி எவையும் இல்லாமலே இந்நிகழ்வு அரங்கேறியது. வண்ண நகலெடுக்கப்பட்ட 25 சுவரொட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நாடக முடிவில் இருந்த தேவையைப் பூர்த்தி செய்ய IWID உதவியோடு 1000 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டன.

காலக் கனவு பயணத்தின் பங்கேற்பாளர்களாக பார்வையாளர்களைக் கருதியதால், அவர்களது எதிர்வினைகளை அரங்க நிகழ்வின் இறுதியில் பதிவு செய்யுறுமவண்ணப் பேனாக்களால் எழுதப்பட்ட கருத்துக்கள் அத்தனையும் துறைமுகத் தொழிலாளர்களுக்காக நிகழ்த்தப்பட்ட 10-வது அளிக்கையின்போது நாற்புறமும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

எண்பதுகளில் இருந்து தமிழகப் பெண்கள் இயக்கங்கள், அமைப்புகளோடு இயங்கி வரும் கீதாவுக்கும் எனக்கும் இந்நாடக ஆக்கம் மீண்டும் புத்துயிர்ப்பு ஊட்டியது. இந்நாடகம் உருவாக்கிய சிந்தனைகளை அடியொற்றி பெண்ணிய விவாதங்களுக்கான ஒரு மேடையாகப் பெண்கள் சந்திப்பு உருவானது. சிறு குழுவானாலும் தொடர்ந்து சந்திக்கவும், சமகால விஷயங்களை விவாதிக்கவும் இது களம் அமைத்திருக்கிறது. இவ்வமைப்பின் மூலம் ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு எதிரராக நடந்த கொடுமைகளைக் கண்டித்து ஒரு கூட்டமும், நேபாளத்தில் உருவாகியுள்ள மாவோயிஸ ஆட்சியின் அரசியல் அமைப்பு வரைவு முயற்சிகள் குறித்த கூட்டமும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஈழத்தில் மக்கள் நலன்களுக்கான அவசர தேவையை வலியுறுத்தி கேட்டிருப்பாய் காற்றே என்ற சிறுநூலும் வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 13, 2007இல் இராணிமேரிக் கல்லூரியில் நடந்த காலக் கனவு நிகழ்வு அரங்க அளிக்கையாகக் காண்பதைவிட இருபத்தைந்தாண்டு பெண்கள் இயக்கத்தின் தோழமைப் பகிர்வாகக் கருதாலாம். பல்வேறு அமைப்புகளில், பல்வேறு துறைகளில், பல்வேறு ஈடுபாடுகளுடன் இயங்கும் அனைவரும் அன்று வந்து சேர்ந்தனர். பலருக்கும் அழைப்பு நேரடியாகக் கிடைக்காதபோதும் வந்து சேர்ந்தனர். சுமார் 150 பேரை எதிர்பார்த்துப் போடப்பட்டிருந்த இருக்கைகள் போதாமல் அந்த அறைக்குள் இருந்த மேடை, கதவுகள் அருகே இருந்த இடைவெளி அனைத்தும் நிரம்பி வழிந்தன. அறைக்குள் நுழையமுடியாமல் வெளியே நின்றவர்கள்கூட காதில் விழும் சொற்களுக்காய்க் காத்து நின்றனர். இவர்கள் தமிழகப் பெண்கள் இயக்கத்தின் பங்காளிகள்; தமது முன்னோடிகளைக் கௌரவிக்க வந்த சந்ததியினர். சுமார் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் அன்று ஒன்றாக இருந்தனர். பெண்கள் இயக்கத்தில் அக்கறை கொண்ட ஆண் தோழர்களும், சகபோரராளிகளான அரவாணித் தோழர்களும் இருந்தனர். வரலாற்றுத்தேடலையும், விமரிசனப் பார்வையையும், ஆழமான நட்பையும், மனம் நிறைந்த தோழமையையும் உறுதிப்படுத்திய அந்நாள் நம்பிக்கை ஊட்டியது, கனவு மெய்ப்படும் கணமாய் விரிந்தது.


No comments: