காலக் கனவு நாடகம் மூலம் என் அம்மா எழுதிய குடும்ப வரலாற்றை எனதாக்கிக்கொள்ள முடிந்தது. அவர் எழுதியது, அவரது பாட்டி சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு. நான் சுப்புலட்சுமியின் பல கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். படிப்பில் இருந்த ஆர்வம், புத்தகங்கள்பால் கொண்டிருந்த ஈர்ப்பு, சிந்தனைசார் உலகில் அவர் கொண்ட மகிழ்ச்சி ஆகியவை என் அம்மா, சித்தி, பாட்டி ஆகியோரால் பெருமதிப்போடு நினைவுகூறப்பட்டவை. என் அம்மாவிற்கு இடதுசாரிப் போராட்டங்கள், பெண்ணியச் சிந்தனைகளுடன் ஆழ்ந்த உறவு இருந்தது. அவற்றையொத்த சிந்தனைகளுடன் இருந்த பாட்டியுடன் தனக்கு மிகக்குறைந்த நாட்களே கிடைத்ததைப் பற்றி வருத்தத்துடன் பேசுவார். என் பாட்டி பங்கஜம், தமது தாயாரான சுப்புலட்சுமி தனது படிப்பிற்காக மேற்கொண்ட முயற்சி பற்றிப் பேசுவார். எனது சித்தி சுப்புலட்சுமி பாட்டிக்கு வலிப்பு வருவதைக் கண்டு பயந்தது பற்றியும், பாட்டியைச் சுற்றித் தன் குடும்பம் பாதுகாப்பு வளையமாக இருந்ததைப் பற்றியும், பாட்டி தனக்கான உலகிற்குள் மூழ்கியதைப் பற்றியும் குறிப்பிடுவார். ஏ.கே.ராமானுஜன், குழந்தைகள் முதல் முதலில் இராமாயணக் கதைகேட்ட தருணத்தை நினைவில் கொள்வதில்லை என்பார்.அதைப்போலத்தான், எனக்குக் கொள்ளுப்பாட்டிக் கதையும் ‘முதன் முதல்’ கேட்ட கணம் நினைவில் இல்லை. அதனால் தானோ என்னவோ என் அம்மாவின் நூல் வெளிவந்த பின்னர் பல நாட்களுக்கு நான் அதைப் படிக்காமலேயே இருந்தேன்.
என் அம்மா இந்த நூலை எழுதிய காலம் தமது இயக்கப் பணிகளில் இருந்து விலகிப் பலகாலமாக அவர் செய்ய முனைந்த படிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட காலம். பொதுவெளியின் சுமையில் இருந்து ஆய்வுலகில் மூழ்கும் உற்சாகத்தை நான் அம்மாவிடம் கண்டேன். பிற வேலைகளை ஒதுக்கிவிட்டு, ஆய்வுப் பணிக்காக நேரத்தை ஒதுக்கிய அம்மாவின் மகிழ்ச்சியைக் கண்டேன். அரசியலில் ஈடுபட்ட காலங்களில் அவருக்குக் கிடைக்காத அவகாசம் இது. எனக்கோ... இந்த நேரம் மக்கள் இயக்கங்களில் மூழ்கி அதன் மகிழ்வையும், பளுவையும் சரிசமமாய் அனுபவித்த நேரம். அதனால், என் அம்மாவிற்கு மனரீதியாக இந்த நூல் முக்கியம் என்பதை உணர்ந்தாலும், அவரது எழுத்துப்பணி, அவசர அமைப்பு வேலைகளில் இருந்து விலக வைத்தது என்றும் கருதினேன். ஒரு மகளென்ற முறையில் இயக்கங்களில் அம்மாவுக்கிருந்த இடத்தை, அவரைவிடக்கூட அதிகமாக நான் மதித்தேன் என்று நினைக்கிறேன். நூல் வெளியாவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் உடல்நலம் குன்றத் தொடங்கியது. இவையெல்லாம் சேர்ந்து, பல நாட்கள் இந்நூலைப் படிப்பதைத் தள்ளிப்போட வைத்தது எனக் கருதுகிறேன்.
காலக் கனவு பற்றிய உரையாடலுக்கு ஒத்திகைகள் தொடங்கிய போது நான் நிலைதடுமாறிக் கொண்டிருந்த காலம். அப்போது தான் இரண்டு மாதங்கள் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிக்காகச் சென்று திரும்பியிருந்தேன். அங்கு, அழகிய மலைப்புறத்தில், எனக்கான சிறுவீட்டில், கீழ்தளத்தில் இருந்த நூலகம், கண்பார்க்கும் வரை விரிந்த மலைச்சரிவுகள் மத்தியில் மகிழ்வுடன் வாழ்ந்து திரும்பியிருந்தேன். வீடு திரும்பியதும் வழக்கமான அம்மாவின் உடல்நலம் குறித்த கவலையும், ஆய்வேட்டை முடிக்கும் தருவாயில் சூழும் தனிமையும் என்னை எதிர்கொண்டன. காலக் கனவு என்னை மீட்டெடுக்க உதவியது.
ஐந்து உற்சாகமான, உணர்வெழுச்சி மிக்கப் பெண்களுடன் காரசாரமாக விவாதிக்கும் வாய்ப்பை இந்நாடகம் தந்தது. வெவ்வேறு வகையில் தனித்துவமான பெண்ணிய அரசியல் சார் வாழ்வை மேற்கொண்ட இப்பெண்களுடன் என்னை இணைக்கும் வாய்ப்பையும் பயிற்சியின் போது, சுப்புலட்சுமியின் வாழ்வில் பேசப்படாத பக்கங்களைப் பற்றிய விவாதத்தில் இறங்கினோம். அவரது டயரியில் சொந்த வாழ்க்கைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாதது இதற்கொரு உதாரணமாகும். இத்தகு மௌனங்களும், அவை பெண்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் பேசினோம். பொதுவெளியில் தமக்கான இடத்தை உருவாக்கிக்கொண்ட பெண்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மௌனங்களைப் பற்றிப்பேசினோம். முத்துலெட்சுமி ரெட்டியின் தேவதாசிப் பூர்வீகம் பற்றிய மௌனம், இடதுசாரி இயக்கங்களின் ஆவணங்களில் பெண்கள் குறித்த மௌனம் என விவாதம் நீண்டது. இடதுசாரி இயக்கப் பெண்களால் இந்த மௌனங்களை உடைக்க முடிந்ததா? கலைத்துறையில் செயல்பட்ட பெண்களால் தமது தினசரி வாழ்க்கைப் போராட்டம், உவகை பற்றி வெளிப்படுத்துவதற்கான மொழியைக் கண்டறிய முடிந்ததா என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, முடிவற்ற உரையாடல்களில் ஈடுபட்டோம்.
நாடகத்தில் வரும் பல பெண்களின் குரல்களை, நான் எனதாக்கிக் கொண்டேன். முத்துலட்சுமியின் ரீங்கரிக்கும் சொற்கள், கிரேஸ்சாமுவேலின் அமைதியான அறிவுபூர்வமான தொனி, தன்னைக் குழந்தைப் பேறு அற்றவள் என உலகம் ஏசினாலும், தனது வாழ்வு முழுமையாக உள்ளது எனக்கூறும் சொற்கள், மங்களம் பெருமகிழ்வோடு ஒரு யுகம் முடிந்து பெண்களின் விடிவு காலத்தின் வரவை அறிவித்தல், பலத்த குரலில் தேவதாசி வழக்கத்தின் சமூகக் கட்டமைப்பை எதிர்த்தமுத்துலட்சுமியின் சிந்தனைகள், சுந்தராம்பாள் கோபத்துடனும்,சோகத்துடனும் விதிமுறைக்கு மாறான வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொண்டதை விவரித்தது, நீலாவதி, தெள்ளத்தெளிவாக ‘பெண்களே உலகின் முதல் பாட்டாளிகள்’ எனச் சுயமரியாதையாளருக்கே உரிய பகுத்தறிவோடு வைக்கும் வாதம்... இப்படிப் பல குரல்கள்! ஏன் நாடகவரிகள் இன்னின்னாருக்கு, இவ்விதமாகப் பிரித்து அளிக்கப்பட்டது. என்ற கேள்வி பயிற்சியின் முடிவில் கேட்கப்பட்ட போது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், என் வரிகளை வேறு யாரும்என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ள விடமாட்டேன் என்பது மட்டும் புரிந்தது.
காலக் கனவு உருவாக்கப்பட்ட காலத்தில்தான் நான் அம்மாவின் நூலைப் படித்தேன். அப்போதுதான், பெண்கள் குரலை பொதுவெளியில் கொண்டு வரும் பெண்ணியப் பணியில் அவரது பங்கை முழுமையாக உணர்ந்தேன்.
ஓராண்டுக்குமுன் வீட்டை ஒழுங்கு செய்து கொண்டிருந்தபோது கசங்கிய பழுத்த காகிதக் கட்டு ஒன்றைக் கண்டுபிடித்தேன். அதனுள் கிரேஸ் சாமுவேல் எனது பாட்டி பங்கஜத்திற்கு எழுதிய கடிதங்கள் கிடைத்தன. அவற்றின்மூலம் கிரேஸ்-சுப்புலட்சுமிக்கு இடையே இருந்த ஆழமான நட்பின் உறுதி தெரிய வந்தது. பங்கஜத்துடன் படித்த பள்ளித்தோழி, திருமணம் நிச்சயமானதால் படிப்பை நிறுத்தியவுடன் எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில் ஒரு தோழியின் பிரிவில் உள்ள சோகமும், அவர் நுழையப் போகும் உலகம் ஒளிமயமானதாக அமையாது என்பதைக் குறிக்கும் சொல்லப்படாத சோகமும் இருந்தது. இந்தக் கடிதங்களை நான் காலக் கனவு அனுபவத்தால் கிடைத்த தோழிகளுடன் பகிர்ந்துகொண்டேன்.
காலக் கனவு நாடகப் பயணம் நாடகத்துடன் முடியவில்லை. மிக முக்கியமான, சிறப்பான நிகழ்வுகளுக்கு அடித்தளமானது. குஞ்சிதம் குருசாமியின் நூற்றாண்டைக்குறிக்க அவருடைய எழுத்துக்களை நாங்கள் பொதுவில் வாசித்தது, ஈழத் தமிழ்ப் பெண்களின் கவிதைகளைக் கொண்டு நிகழ்த்திய கவிதா நிகழ்வு, பெண்கள் சந்திப்பு உருவாக்கம் எனப் பல நிகழ்வுகள் தொடர்ந்தன. பெண்கள் சந்தித்துத் தமக்கான விவாதங்களை நடத்தும் வெளியைச் சாத்தியப்படுத்தியது.
சில நிகழ்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள சிறப்பான அம்சங்களை வெளிக்கொணரும். காலக் கனவு எங்கள் வாழ்க்கையை அவ்வாறு தொட்டது. எங்கள் இருப்பை அப்படியே அங்கீகரிக்கவும், எங்களது வெவ்வேறு வாழ்க்கை வரலாறுகளை முழுதுமாக அங்கீகரிக்கவும் உதவியது. எல்லாவற்றையும்விட, எமது தனிப்பட்ட, அரசியல் வாழ்வில் தேர்ந்தெடுத்த, தேர்ந்தெடுக்கும் முடிவுகளின் பொருளை உணர்வதற்கான தேடலை உறுதிப்படுத்தியது.
1 comment:
Mythili Sivaraman life itself has so many faces and factors.They are yet to be written.The communist movement have respect to women in particular but failed to bring out the glorious roles played by women in its history as well as history ..Mythili Sivaraman has many "silence" in this regards..It is her generous attitudes.. She never fight /struggle for her place in any forum..Unfortunately her "health"does not permit her to come forward to do many things..I am having a long dream to take a documentary on her...I have no own camera..Her softness done many miracles than orders and instructions---will I get a chance to film her? dont know..My economical status yet to be raised...with hope--- vimalavidya@gmail.com
Post a Comment