ஊரின் முகப்பில் ஒரு பெரிய தாமரைக் குளம். நான் சென்றிருந்த காலம் அறுவடை முடிந்து காவிரி ஆற்றின் பல கிளை நதிகளும் உலர்ந்த மணல் படுகைகளாகக் கிடக்கும் சித்திரை மாதம். தாமரைகள் முன்னர் மலர்ந்ததன் ஞாபகமாகக் குளத்தின் மேற்பரப்பெங்கும் தாமரை இலைகள் மூடி மறைத்து நின்ற கரையோரத்தில் நின்றபோது இனந்தெரியாத ஒரு உணர்வு என்னுள்.
மணலூர் கிராமத்தின் குளக்கரையில் மூன்று கொடி பீடங்கள் செங்கொடிகள் படபடக்கும் கம்பங்களைத் தாங்கி நிற்கின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிளவுண்ட ஊரும் சேரியும் சாதியத்தின் நிதர்சனமாக மணலூரிலும். ‘மணியம்மாள்’ என விசாரித்தவுடன் பிரகாசிக்கின்றன எஞ்சியிருக்கும் முதியவர்களின் முகங்கள். ‘அதோ அதுதான் மணியம்மாள் கொடிக்கம்பம்’ என காண்பித்தனர்.
தாமரைகள் பூத்திருந்த குளக்கரை. கொடிக்கம்பங்களில் எங்கும் மணியம்மாளின் பெயர்கூட நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ஒரு பெருமிதம் மிக ஆழ வேர்விட்ட கல்விருட்சமாக இறுகக் கவ்வியது மனதை. எழுதப்பட்ட வரலாறுகளுக்கெதிரான புரட்சிகரப் போராட்டம் எத்தனை தளங்களில் நடைபெற வேண்டியிருக்கிறது என்ற மலைப்பு தோன்றியது. ஆழ்ந்து பார்த்துப் பெண்ணாக உணர்கையில் தோன்றும் தனிமை, பூதாகரமாக என் முன் நின்றது. உலர்ந்த, பழுத்த, பசுமையான தளிர் இலைகளின் கீழே கருத்துக் கிடந்த குளத்து நீரில் இறங்கி நிற்கத் தோன்றியது.
மணியம்மாளை நான் முதன்முதலில் அறிந்தபோது நான் பள்ளிச்சிறுமி. 1986 அல்லது 87ஆம் வருடத்தில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘பாதையில் பதிந்த சுவடுகள்’ என்ற தொடர் வாரந்தோறும் தினமணிச்சுடரில் வெளிவந்தது. கோபுலு வரைந்த ஓவியங்கள் சகிதம் வந்த அந்தத்தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கான முக்கியக் காரணம் மணியம்மாள் கிராப்பு வைத்திருந்ததும் ஆண்களைப் போல உடையணிந்திருந்ததும்தான். ஒரு சிறு நகரத்தின் அத்தனை கெடுபிடிகளுக்குள் ஒரு ஆணைப் போல உடையணிவது என்பது ஒரு மிகப் பெரிய கலகச்செயலாக என்னைக் குதூகலப்படுத்தியது. அரசியல் வாசமற்ற வீட்டுச்சூழலில் மணியம்மாள் நான் படித்து என்னைக் கவர்ந்த ஒரு கதாநாயகியாக மனதின் ஒரு ஓரத்திற்கு ஒதுங்கிக்கொண்டார்.
கல்லூரி முடித்துத் தொலைக்காட்சி நிருபரான பின் மார்க்சியப்பரிச்சயம் ஏற்பட்டு வாசித்தும் இயங்க முயன்றும் வந்த காலத்தில் மணியம்மாள் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல் மூலம் மீண்டும் வந்தார். முன்னர் புரியாத பல விஷயங்கள் புரிந்தன. மார்க்சியத்தின் மூலநூல்கள் சிலவற்றை மிகக் கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ள முயன்ற காலத்தில் சேகுவேரா, ஏ.கே. கோபாலன், மணியம்மாள், ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள்தாம் எனக்குச் செயல் விளக்க நூல்களாயிருந்தன. தத்துவமும் கோட்பாடும் நடைமுறைப்படுத்தப்படும்போது ஏற்படும் உணர்வெழுச்சி, தத்துவங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றிற்கான தேவைகளை உணர்ந்துகொள்ளவும் உதவின.
பொதுவுடைமைத் தத்துவத்தை தன்வயப்படுத்தி, புடம்போட்ட மாமனிதர்களுள் மணியம்மாள் தலை சிறந்த ஒரு வீராங்கனை. பல தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கிய பொதுவுடைமைக் கட்சியிலிருந்து மிகக் குறைவான அளவிலேயே பெண் ஆளுமைகள் வெளியுலகத்தில் அறியப்படுகிறார்கள். மணியம்மாளின் கதையைப் படிக்கும்போது (மணியம்மாளின் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை) ஏடறிந்த வரலாறெல்லாம் பெண்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுதான் எனத் தோன்றுகிறது.
‘1979, 80, 81 ஆண்டுகளில் கீழ்த்தஞ்சைப் பகுதியில் உழவர் பெருமக்களின் வாழ்நிலையை ஆராயப் போன நான் 1953இல் மரித்த மணலூர் மணியம்மாள் என்ற இந்த அரிய பெண்மணியைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு உழவர் குடிலிலும் இந்த அம்மையைத் தெய்வமாகக் கொண்டாடியதையும் அவருடைய செயல்களை, வீர சாகசங்களை, போராட்டங்களை அவர்கள் கதைகதையாக விவரித்ததைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தேன்....நான் கேள்விப்பட்டிராத, நம்ப முடியாததொரு செய்தியாக, அவர் ஒரு கைம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானக் கொடுமையிலிருந்து வெளிப்பட்டு, ஆண் கோலத்தில், ஒடுக்கிய சனாதனங்களை எதிர்த்து நின்றார் என்ற செய்தி சுரீரென்று என் உணர்வில் உறைத்தது’ என்று ராஜம் கிருஷ்ணன் ‘பாதையில் பதிந்த சுவடுகள்’ முன்னுரையில் கூறுகிறார். பின்னர் அவரே இந்த ‘வரலாற்று’ நாயகியை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தார்.
தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், பெரியார் இயக்கம் எனப்பல தளங்களில் இயங்கிய ஒரு ஆளுமையைத் தற்செயலான ஒரு குடியானவ முதியவருடனான உரையாடலில் கேள்விப்பட்டுப் பின்னர் பல கிராமங்களிலும் தேடிக் கிடைத்த வாய்மொழி வரலாற்றை ஒரு நாவலாகப் பதிவுசெய்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
கட்சி ஸ்தாபனத்தின் இறுக மூடப்பட்ட ஜன்னல்களில் ஒன்றை வலுக்கட்டாயமாக ராஜம் கிருஷ்ணன் திறந்து அதிகாரப்பூர்வ கட்சி வரலாற்றில் மணியம்மாளுக்கு இடம் பெற்றுத் தந்தார். எனினும் கட்சியால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவராக மணியம்மாளின் இறுதிக் காலம் கழிந்ததால் அவரைப் பற்றி ‘அடக்கி வாசிப்பதையே’ கட்சி பெரும்பாலும் செய்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நான் பணியாற்றிய காலத்தில் மணியம்மாளைப் பற்றிப் பல மூத்த தலைவர்கள் பெரும் மதிப்பையும் கூடவே அவர் ஒரு ‘சாகஸவாதி - கட்சி ஒழுங்கிற்கு உட்படாதவர்’ என்ற உணர்வையும் கொண்டிருந்ததை அறிய முடிந்தது.
சனாதன, ஆணாதிக்க, சாதிய சமூகத்தில் ஒரு பெண் மனுஷியாக வாழ்வதே சாகசமாக உள்ள நாட்டில், அதுவும் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஒருவர் குடும்ப, சமூக மதிப்பீடுகளை மட்டுமா? கட்சி, இயக்கக் கோட்பாடுகளையும் நடைமுறை இடைவெளிகளையும் கேள்விக்குட்படுத்தினார் என்றால் அவர் ஒரு நல்ல பெண்ணாகக் குடும்பத்திலும் இருக்க முடியாது; சமூகமும் அவரைக் கேலிபேசும்; சமூகத்தைப் புரட்டிப்போடப் போகும் புரட்சிகர அமைப்புகளும் அவரை ஜீரணிக்கச் சிரமப்படும் என்பது மணியம்மாள் பெறாத மரியாதைகள் நமக்குச் சொல்லும் செய்தி.
இந்த இருட்பிரதேசம்தான் காலக் கனவின் கருப்பொருள் என்று நான் நினைக்கிறேன். தம்மளவில் மிகப் பெரும் ஆளுமைகளாகச் சொந்த வாழ்வில் துணிச்சலும் பொது வாழ்வில் அர்ப்பணிப்பும் புத்திசாலித்தனத்தோடும் கவிதை மனதையும் அளவிலாத பொது அன்பையும் (குடும்பத்தின் மீதும், சொந்த பந்தங்களின் மீதுமான பெண்மய அன்பு அல்ல) சுமந்து 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து செயல்பட்ட பல பெண்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ள வரலாற்று இருளின் ஆழத்திலிருந்து வ. கீதாவால் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு ஒளிக்கீற்றுதான் காலக் கனவு.
பெரும் வாசிப்பும் ஆராய்ச்சியும் உருவாக்கிய தரவுகளால் எழுதப்பட்ட இந்த பனுவலைக் கண்ணீரும், பெருமூச்சும், ஏளனமும், உரத்தச்சிரிப்பும், களிப்பும், இச்சையும், மௌனமும், கையறு நிலையும் எனப்பல உணர்வு வண்ணங்களில் செதுக்கினார் மங்கை.
இதில் ஒரு நடிகையாகப் பங்கேற்ற எனக்குப் பல சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் மிக ஆழத் தைத்த உணர்வு, ஒவ்வொரு பெண்ணாக நாங்கள் பேசியும் பாடியும் நடிக்கும்போது ஏன் இவர்கள் பொதுவெளியில் அவர்களுக்குரிய வரலாற்றுப் பங்கைப் பெறவில்லை என்னும் பாரமான கேள்விதான்.
ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவலைத் தவிர அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் அ. மங்கை இயக்கிய ஒரு நாடகத்தைத் தவிர மணியம்மாள் என்கின்ற இந்தப் பெண்ணியப் புரட்சியாளர் கொண்டாடப்படவில்லை. ஏன்?
காலக் கனவு நாடகத்தை நாங்கள் அரங்கேற்றியபோது அது குறித்த பதிவு ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ஜனசக்தி வெளியிட்டது. பல வகைகளிலும் சிறந்த இந்த நாடகத்தில் தஞ்சைப்பகுதியில் விவசாய இயக்கம் கட்டிய மணியம்மாள் என்ற ஒருவரைப்பற்றிக் கூறினார்கள் என அந்தப் பதிவு எழுதியது.
தோழர் பி. சீனிவாசராவிற்கு இணையான ஆளுமையான விவசாய, விவசாயத் தொழிலாளர் இயக்கங்களைத் தோற்றுவித்த தலைவர்களுள் ஒருவரான மணியம்மாள் யாரென்றே ஜனசக்தி இதழுக்குத் தெரியவில்லை. கோபம்கூட வரவில்லை, துக்கம்தான் நெஞ்சை அடைக்கிறது. இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல... எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், அலட்சியங்களையும் உதாசீனங்களையும் மணியம்மாள்கள் கையாண்டிருப்பார்கள்; அப்படிச் செய்த பின்னும், வெற்றி கரமாக முறியடித்த பின்னும் அவர்களை வரலாற்றின் உதவியால் எப்படி ஒதுக்க முடிந்துவிடுகிறது என்ற எண்ணத்தினால் வருகிற துக்கம்.
இன்னொரு நகரில் ஒரு கட்சித் தோழர் வந்து ‘நீங்கள் ஏன் ஜீவாவைப் பற்றிக் கூறவில்லை?’ எனக் கேட்டார். ‘நாங்கள் மணியம்மாளைப் பற்றிக் கூறியிருக்கிறோம்’ என்று கூறியபோது ‘நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் பற்றிக் கேட்கிறேன்’ என்று கூறினார். மணியம்மாள் தமிழகக் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவர் என அவருக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது.
இன்னும் பல கேள்விகள், உரையாடல்கள், இடதுசாரிப் பெண்கள் பற்றிய பகுதி குறித்து நிகழ்ந்தன. பலர் பல தகவல்களையும் பெயர்களையும், தரவுகளையும் தந்து நாடகத்தைச் செழுமைப்படுத்தினர்.
பொதுவான ஒரு சமூகத்தில் பெண்கள் வாழ்வதும், இயங்குவதும் சாதாரண நிகழ்வாக இயல்பானதொன்றாக இன்னும் மாறாத ஒரு காலகட்டத்தில் தன் சூழல் தனக்கு விதிக்கும் வரையறையிலிருந்து வெளியேறும், முரண்படும், கேள்விக்குட்படுத்தும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு தனிமையைத் தன்னுடன் வளர்க்கிறாள். அது பல சமயங்களில் அவளுக்குச் சக்தியளிப்பதாகவும் பல சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது.
இதற்கு மணியம்மாளும் விலக்கல்ல. மேலும் இத்தகைய பெண்களின் வாழ்வு மற்றும் பங்களிப்பு குறித்த பலத்த மௌனத்தினூடாக வரலாறு இவர்களின் மீது இன்னொரு தனிமைப் போர்வையைப் போர்த்துகிறது. மணியம்மாள், வரலாற்றில் தனிமையான மனுஷியாகவே இருந்தார், இருக்கிறார். காலக் கனவு நாடகத்தினூடாக கீதா, மங்கை, கல்பனா, கவின்,பொன்னி, ஸ்ரீஜித் ஆகியோரோடு கழித்த ஒரு வருடம் என்னுள் உறைந்துபோன என்னுடைய தனிமையை ஆற்றுப்படுத்தியது.
மிகுந்த கனவுகளோடும் நம்பிக்கைகளோடும் கழிந்த என் வாழ்வின் அற்புதக் காலமாக இருந்த, கம்யூனிஸ்ட் கட்சியில் நான் செயல்பட்ட குறுகிய காலம் பின்னர் பல காரணங்களால் என் தொண்டையில் அடைத்துக்கொண்ட துயரமாக வேர்விட்டு என்னை இறுகிப்போக வைத்திருந்த பயணத்தில் என்னை அசைத்து இயல்பாக மூச்சுவிட வைத்தது இந்த நாடகம்.
நான் முன்னர் பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசியக் குழுக் கூட்ட அரங்கில் இந்தியா முழுமையிலிருந்தும் வந்த தோழியர்களின் முன்னிலையில் தஞ்சையில் காலக் கனவு 22.12.2007 அன்று நிகழ்ந்தது.
பின்னர் அவர்களுடைய பொதுக் கூட்டத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்தபோது எப்போதோ வைராக்கியத்தோடு உள்ளழுத்தி வைத்துவிட்ட அத்துயரம் என்னையறியாமல் கேவல்களாக, கண்ணீராகப் பெருக்கெடுத்து என்னை விடுவித்தது. பொன்னியின் கைப்பற்றி காலக் கனவின் துணையோடு நான் பெருங்கனவொன்றிலிருந்து பிய்த்தெறியப்பட்ட துயரத்தை அன்று தஞ்சை வீதிகளில் கடந்தேன். புரட்சிகரச் செயல்பாடுகளில் நேரடியாக இல்லாமலே தனிமை இன்னும் தொடர்கிறது. துயரம் மட்டும் கரைந்து போகவிட்டது. இலகுவாக இருக்கிறது இப்போதைய வெறுமை.
என்னைத் துயரப்படுத்தி உற்சாகப்படுத்திக் கண்ணீர் விடச்செய்து பின்னர் என்னை விடுவித்த சக்தியை நான் மணியம்மாளின் ஆன்மாவிலும் என் காலக் கனவு தோழர்களின் உறுதியிலும் பொருத்த செய்ய முயல்கிறேன்.
அதன் தொடர்ச்சியாக மணியம்மாளைப் பற்றி மேலும் ஆகவு செய்ய, ஓரு ஆவணப்படம் எடுக்க முயன்று வருகிறேன். அதன் பகுதியாகவே மணலூர் சென்றேன். மொட்டையடித்திருந்த தலையில் முடி வளர்ந்து கிராப்பாக இருக்கும் என் தோற்றத்தைப் பார்த்த ஒரு முதியவர்,
‘அச்சு உங்களை மாதிரியே இருப்பாங்க அம்மா’
எனக் கூறியபோது அது மலைக்கும் மடுவிற்குமான ஒப்பீடு என்றபோதும் உவகை கொப்பளித்தது எனக்குள்.
மணியம்மாள் வாழ்ந்த வீடு, அவரே கைப்படத் தோழர்களோடு கட்டிய மதிற்சுவர், அவர் புழங்கிய சேரி வீதிகள், அவர் தலித் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திய வீடு இருந்த இடம் என மணலூரில் உலவியபோது அவர் அங்கே அதிகாரபூர்வமான வரலாறுகளால் அழிக்க முடியாத தொன்மமாக விரவிக் கிடப்பதாகத் தோன்றியது. இன்னும் சில வருடங்களில் அவரை நேரில் கண்ட சாட்சிகள் இல்லாமல் போய் விடலாம். ஆனால் மணலூரில் இப்போதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீவிர உறுப்பினர்களாக இருக்கும் மக்களின் துணிவில் அவர்களின் பாடல்களில் எங்கும் அவர் இருக்கிறார். தன் தனிமையையும் மீறிய சக்தியாக அவர் தன்னுடைய துணிவைத் தன் செய்தியாக்குகிறார். உற்சாகம் தொற்றிக்கொள்ள நான் மணலூரின் அன்பான மனிதர்களிடம் விடைபெற்று அந்தியின் துவக்க ஒளியில் மின்னிக்கொண்டிருந்த தாமரைக்குளத்தை மீண்டும் கடந்து வெளியேறுகிறேன்.
முன்னர் ஒரு காலத்தில் வேட்டி கட்டிய மணியம்மாள் சைக்கிள் மிதித்த மண்பாதை தடத்தில் உள்ள தார் ரோட்டில் பைக்கில் செல்கையில் முகத்திலறையும் காற்று அந்த வரலாற்றுத் தனிமையைச் சிறகுகளாக்கும் வித்தையைக் கூறிச் சென்றது.
No comments:
Post a Comment